தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதற்கிடையே, டெல்லியில் இன்று (நவம்பர் 25) காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62-வது கூட்டம் நடைபெற்றது.
15 நாட்களுக்கு 2,000 கனஅடி நீர்
முன்னதாக, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
அப்போது, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
கர்நாடகா உத்தரவுகளைப் பின்பற்றவில்லை
இதற்கு முன்பு கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரியில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த இரு உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய உத்தரவு
இந்தச் சூழலில், இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே. ஹல்தார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வதனாரே வாழ்த்து தெரிவித்தார்.
