நவீன வாழ்க்கை முறையில் ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாடத் தேவைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சமையல் எரிவாயு இணைப்பைப் பெற முடியாமல், தமிழகத்தில் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட ஏராளமான குடும்பங்கள் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களாகப் புதிய சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விறகு அடுப்புகளிலிருந்து விடுபட்டு, புகையில்லாத சமையலறைக்கு மாறிய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் என்பது வெறும் எரிபொருள் மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாகவும் மாறியுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. குடும்பங்களின் தேவைக்கேற்ப ஒற்றைச் சிலிண்டர் மற்றும் இரட்டைச் சிலிண்டர் இணைப்புகளையும் வழங்கி வந்தன.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஏற்றி வரும் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட விநியோக நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்ததுடன், தற்காலிகமாகப் புதிய காஸ் இணைப்புகள் வழங்குவதையும் நிறுத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சில மாதங்களிலேயே சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், புதிய காஸ் இணைப்புகள் வழங்கும் பணி மட்டும் மீண்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுமணத் தம்பதிகளின் தவிப்பும் ஏஜென்சிகளின் பதிலும்
எட்டு மாதங்களாக நீடிப்பதாகக் கூறப்படும் இந்தத் தடையால், புதிதாகத் திருமணமாகித் தனிக்குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகள், வாடகை வீடுகளுக்குக் குடிபெயரும் குடும்பங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய சமையல் காஸ் இணைப்பு கோரி ஏஜென்சிகளை அணுகும் பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏஜென்சி நிர்வாகிகளிடம் கேட்டால், “மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதி வந்தால் மட்டுமே புதிய இணைப்புகளை வழங்க முடியும்” என்ற பதிலையே தொடர்ந்து தெரிவிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால், வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்காமல், அதிக விலை கொடுத்து வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களையோ அல்லது மாற்று எரிபொருட்களையோ பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
அரசுகளின் அலட்சியம் என நுகர்வோர் அமைப்புகள் அதிருப்தி
இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து நுகர்வோர் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறியதாவது:
“சமையல் காஸ் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. குறிப்பாக, திருமணமாகித் தனிக்குடித்தனம் செல்வோர் புதிய காஸ் இணைப்பு கேட்டால் தரப்படுவதில்லை.
கடந்த எட்டு மாதங்களாகப் புதிய இணைப்புகள் வழங்கப்படாததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளன. ஏஜென்சிகளிடம் கேட்டால் மத்திய அரசின் அனுமதியைக் காரணம் காட்டுகிறார்கள்.
மத்திய அரசு புதிய இணைப்புகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், மாநில மக்களின் நலன் கருதி தமிழக அரசும் இதனை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல் மௌனம் காத்து வருகிறது.
இதன் விளைவாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டின் மீதும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடையும் சூழல் உருவாகியுள்ளது” என்றார்.
இனியாவது விடியல் பிறக்குமா?
சர்வதேசக் கப்பல் போக்குவரத்து சீரடைந்து, விநியோகக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், புதிய காஸ் இணைப்புகள் மட்டும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, புதிய சமையல் காஸ் இணைப்புகள் வழங்கும் பணியை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அதேபோல், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பொதுமக்களின் சிரமத்தைப் போக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
