உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய கே.பி. சங்கர் – தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவொற்றியூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவொற்றியூர் விம்கோ நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 1,000 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அன்றாடத் தொழிலாளர்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்களும் வழங்கப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நட்சத்திரப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசுகையில், தவெக தலைமையிலான அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் திருவொற்றியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீடு, கோவில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், தற்போதைய ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகக் கூறிய அவர், “மாற்றம் வரும் என்று ஏங்கி, மாற்றத்தை நம்பி வாக்களித்த உங்களுக்கு வாய்க்கரிசி போடத்தான் இந்த ஆட்சி வந்திருக்கிறது” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஜூலை மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், நவம்பர் மாதம் வரை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தவறு செய்தவரைக் கண்டிக்கத் தவறிய முதலமைச்சருக்கு மக்கள் வாக்களித்து ஏமாந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், திருவொற்றியூரில் கடந்த ஆறு மாதங்களாக யார் சட்டமன்ற உறுப்பினர் என்பது கூட மக்களுக்குத் தெரியாத நிலை இருப்பதாகக் கூறிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மக்களின் குறைகளைக் கேட்கவும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் கே.பி. சங்கர் தொடர்ந்து காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் தற்போதைய நிலை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரியாணி மற்றும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டதுடன், தவெக அரசுக்கு எதிரான திமுக பேச்சாளரின் விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
