Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் விவகாரம்: CRPF பாதுகாப்பு.. மசூதிக்கு வேலி.. தமிழக அரசு வாதங்கள் நிராகரிப்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: CRPF பாதுகாப்பு.. மசூதிக்கு வேலி.. தமிழக அரசு வாதங்கள் நிராகரிப்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் அதிரடி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் (கல்தூண்) நாளை (நவம்பர் 28) ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மலை அமைந்துள்ள முழுப் பகுதியிலும் மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) நிறுத்திப் பாதுகாப்பு வழங்கவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கீழ்க்கண்ட முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்:

  • நாளை தீபம் : உச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தீபத்திலிருந்து சுடர் எடுத்துச் சென்று நாளை (நவ.28) மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  • ஏற்ற அனுமதி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

  • CRPF பாதுகாப்பு: திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழுப் பகுதியிலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) நிறுத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். “சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் போலீஸ் தவறிவிட்டதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடனடியாக ஏற்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எஃப் வசம் சுமுகமாக ஒப்படைப்பதைத் தமிழ்நாடு டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்” என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி (DGP), அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிப்பட்டுள்ளது. 

  • தமிழக அரசு தரப்பு வாதங்கள் ஏற்க மறுப்பு : தமிழக அரசின் ‘தீபத்தூண் அல்ல; சர்வே கல்’ என்கிற விவாதத்தையும், ‘ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி ஆகம விதிகள் உள்ளன’ என்கிற வாதத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள்,  மதுரை ஆட்சியர் அளித்த விளக்க அறிக்கையையும் நிராகரித்துள்ளனர். 

  • மசூதிக்கு பாதுகாப்பு: தீபத்தூண் அருகே உள்ள மசூதிக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் , கோயில் மற்றும் தர்காவை வேறுபடுத்த தர்காவைச் சுற்றி வேலி அமைக்கலாம் என தெரிவித்துள்ளது. 

    விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்த காட்டமான கருத்துகள்

வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் ஆவேசத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்:

  • “இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம்”: “திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததால் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

  • “அந்தோ பரிதாபம்!” – நீதிபதிகள் வேதனை: “தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது ‘அந்தோ பரிதாபம்’ என்ற வார்த்தையே முதலில் நினைவுக்கு வருகிறது. மிகுந்த வலியோடும் வேதனையோடும் இதைக் கூறுகிறோம். ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சியே மிக உயர்ந்தது. இந்திய மக்களுக்கு நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவத்தை உறுதி செய்வதையே அரசியலமைப்பின் முகப்புரை பிரதிபலிக்கிறது” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
    திருப்பரங்குன்றம் : தீபம் ஏற்ற அனுமதி.. பொதுமக்களுக்கு தடை - தேவைப்பட்டால் CISF பாதுகாப்பு!

  • மாநில அரசு மற்றும் கோயில் நிர்வாகத்திற்குக் கண்டனம்: “மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன. இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது” என நீதிபதிகள் ஆவேசத்துடன் குறிப்பிட்டனர்.

  • மதுரை அதிகாரிகள் மீது அதிருப்தி: “மதுரை மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் நடத்தையால் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பாகப் பார்க்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவை நீதிமன்றமே மாற்றும் வரை அதை மீற முடியாது” என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • அறங்காவலர் குழு கலைப்பு: நிர்வாகம் மாற்றம்: “திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு செயல்பட தற்காலிகமாக தடை விதித்துள்ள நீதிபதிகள், தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் , பார்த்திபன் தலைமையில் நிர்வாகக் குழு அமைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 15-ஆம் தேதி உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளதால் தமிழக நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ