Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சரிவால் நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்தி – பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி!

தங்கம் விலை சரிவால் நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்தி – பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி!

-

- Advertisement -

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன.தங்கம் விலை சரிவால் நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்தி – பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி!

நகைக்கடன் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளதாகவும், உடனடியாக வங்கிக் கிளையைத் தொடர்புகொள்ளுமாறும் அனுப்பப்படும் இந்தச் செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த காலத்தில் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்து விற்பனையான நிலையில், தற்போது படிப்படியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.11,541-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை குறைவது நகை வாங்குவோருக்கு ஓரளவு ஆறுதலை அளித்தாலும், ஏற்கெனவே வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தபோது, வாடிக்கையாளர்களுக்கு அதிகக் கடன் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தங்கத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ளதால், அடகு வைக்கப்பட்ட நகைகளின் மதிப்புக்கு ஏற்ப வழங்கப்பட்ட கடன் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளதாக வங்கிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. மேலும், உடனடியாக வங்கிக் கிளையைத் தொடர்புகொண்டு கடன் கணக்கைச் சரிசெய்யுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவது முன்னெச்சரிக்கைத் தகவல் மட்டுமே என்றும், தற்போதைக்கு கூடுதல் பணம் செலுத்தவோ அல்லது கூடுதல் நகைகளை வழங்கவோ யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும், தங்கத்தின் விலை உயர்ந்திருந்தபோது அதிகக் கடன் வழங்கிய வங்கிகள், தற்போது விலை குறைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்புவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அலைக்கழிக்காமல், நிலையான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி நகைக்கடன் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சுமதி, அப்பாஸ், சுந்தர்ராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வாடகைக் குறைப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் கோரி ஈரோடு ஜவுளிவியாபாரிகள் கடையடைப்பு!

MUST READ