தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், சென்னை உள்ளிட்ட 6 பதிவு மாவட்டங்களில் மாதிரி பதிவு மையங்களை அமைக்க தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் முதற்கட்டமாக, சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தாம்பரம் ஆகிய 6 பதிவு மாவட்டங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,
சென்னை வடக்கில் இணை II சார்பதிவாளர் அலுவலகம்.
சென்னை மத்திய மற்றும் சென்னை தெற்கில் இணை III சார்பதிவாளர் அலுவலகங்கள்.
செங்கல்பட்டில் இணை III சார்பதிவாளர் அலுவலகம்.
கோயம்புத்தூர் வடக்கில் இணை II சார்பதிவாளர் அலுவலகம்.
தாம்பரத்தில் இணை II சார்பதிவாளர் அலுவலகம்.
என மொத்தம் 6 புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், புதிதாக உருவாக்கப்படும் இந்த இணை சார்பதிவாளர் அலுவலகங்களை சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த மாதிரி பதிவு மையம் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
