தற்போதைய ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமான கருத்து என்றும், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொழில் முதலீடுகள், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
உள்ளூர் தொழில்களைப் பாதிக்கக் கூடாது முதலீடுகள்
அயல்நாட்டு முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்துப் பேசிய மு. வீரபாண்டியன், முதலீடுகள் உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும் என்றார்.
அயல்நாட்டு முதலீடுகள் நமது உள்ளூர் தொழில்களை அழிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்றும், உள்ளூர் தொழில்கள் மற்றும் மக்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முதலீடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு
தற்போதைய ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த மு. வீரபாண்டியன், அத்தகைய கோரிக்கை மலிவான அரசியல் என்றும் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
“புதிய கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஜனநாயகத்திற்காக இந்தக் கட்சியை நாங்கள் ஆதரித்தோம். ஆட்சியின் தவறுகளைக் கண்டிப்பதும், அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவதும் வேறு. அதற்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறுவது தவறு. அதற்கான காரணங்களோ, சூழலோ தற்போது இல்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமான கருத்து” என்றார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், இத்தகைய சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தைக் கண்டிக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும், இச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தலைமைச் செயலகம் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்துத் தளங்களிலும் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், தலைமைச் செயலாளரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
“ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உரிமை உண்டு. எங்களைப் பொறுத்தவரை தமிழக அரசு திறந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். தனிநபர் தவறுகள், குற்றங்கள் என்பது வேறு. உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பணியிடத் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை அனைத்தும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
முதலமைச்சர் ஏன் பேசவில்லை? – செய்தியாளர்களிடம் ஆவேசம்
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் ஏன் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மு. வீரபாண்டியன்:
“முதலமைச்சருக்காக நான் வாய் திறக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்துப் பேசாத நாள் இல்லை. என்னிடம் அதிகாரம் இல்லை; அறிக்கை மூலமாகத்தான் கேள்வி எழுப்புகிறோம். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டோம். இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொல்ல வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் அடங்கியதே இந்த அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் முதலமைச்சர். சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நேரடியாக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ளன. பெண்கள் மீதான அடக்குமுறைக்கு முதலமைச்சரே நேரடிப் பொறுப்பு. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததையும், ஏற்பட்ட காலதாமதத்தையும் கண்டித்து 12 அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம்” என்றார்.
காவல்துறை செயல்பாடு குறித்து விமர்சனம்
தமிழகக் காவல்துறையின் செயல்பாடு பலவீனமாக இருப்பதாக மு. வீரபாண்டியன் குற்றம்சாட்டினார்.
செஞ்சி பகுதியில் சிறுமி காணாமல் போன வழக்கில் பல நாட்களாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு பலவீனமாக இருப்பதாகவும் விமர்சித்த அவர், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு காணாமல் போன சிறுமியை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
