கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் தொந்தரவு அளித்த வழக்கில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 119 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் அவரைப் பாதுகாக்க முயன்றவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. கைது நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்”: “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்கப் பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக்கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு நற்சான்றிதழ் (Conduct Certificate) வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.”

பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு எதிரான இழிவான பிரசாரம்: “பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.”
நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையத்தின் அழுத்தம்: “சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டிருக்கிறார்.”
சமரச அழுத்தம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை: “கடந்த 119 நாட்களாக இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட அதிகாரியிடம் சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!” என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு, கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி தவெக எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் தனது செல்போனிலிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம், எதிர்க்கட்சிகள் ஆகியவை தலையிட்டுக் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நவ.23 அன்று மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வப் புகார் அளித்தார். இதனையடுத்து BNS சட்டப்பிரிவுகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்த நிலையில், திரட்டப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#BREAKING கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!


