நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது? – சீமான் கேள்வி; கடைசி 6 பந்துகளையும் சிக்சர்களாக விளாசி வெற்றி பெற வேண்டும்” எனப் பேச்சு!
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தானே போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த சீமானிடம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவரைப் பொதுவேட்பாளராகக் கருதி ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “பசியில் இருக்கும்போது பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள்? ஆதரவு கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சீமான் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய அவர், “நான் பொதுவேட்பாளர் என்று திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? அல்லது நான்தான் சொன்னேனா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், யாரிடமும் ஆதரவு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்த சீமான், “கடைசி 6 பந்துகள்தான் இருக்கின்றன; அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக விளாசி வெற்றி பெற வேண்டும்.
காசு கொடுத்து ஓட்டு வாங்குகிற தேர்தலில்தான் தோற்றேன்; லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை வீழ்த்த முடியாது” என்றும் பேசினார்.
