மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, தென் மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் பிரதிநிதித்துவ இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் திட்டம், தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைவெளி 413-ல் இருந்து 620 ஆக அதிகரிக்கும்:
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கீட்டை 25 ஆண்டுகளுக்கு முடக்கி வைப்பது, சில கவலைகளுக்குத் தீர்வாக அமையலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மாநிலங்களுக்கிடையிலான இடங்களின் எண்ணிக்கையில் உள்ள முழுமையான வித்தியாசத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், தென் மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான இடங்களின் எண்ணிக்கை வித்தியாசம் 413-ல் இருந்து 620 ஆக உயரும் என்றும், இதனால் தென் மாநில எம்.பி.க்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அரசியல் ரீதியாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவதிலும் ஆபத்து:
மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செயல்முறை ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்குள் தொகுதிகளின் எல்லைகளை அரசியல் நோக்கத்துடன் மாற்றியமைப்பதே மிகப்பெரிய ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஏன் புதிய மசோதா?:
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்காக மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு மத்திய அரசு முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்:
தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, 2026-ஐ நவம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயரக்கூடும்.
இந்தத் திட்டம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம், நாடாளுமன்றத்தில் அவற்றின் அரசியல் செல்வாக்கு மற்றும் தொகுதி எல்லைகள் தொடர்பாகப் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
