திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த தம்பதி ரூ.207.6 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கையாக இது கருதப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஜெயின் ஆகியோர் இந்த பிரம்மாண்டமான காணிக்கையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வழங்கினர்.
46 வகையான தங்க நகைகள் காணிக்கை
மொத்தம் 121 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத்தில் 46 நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு தயாரிப்புக் கட்டணம் உட்பட ரூ.207.6 கோடி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த நகைகளில் 106 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள் ஏழுமலையானுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 கிலோ தங்கம் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு தங்க ஆடை தயாரிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
வைரம், விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட நகைகள்
இந்தக் காணிக்கையில் வைரம் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 238.2 காரட் வைரங்கள், 2,247.7 காரட் விலைமதிப்பற்ற கற்கள், 91.6 காரட் நீலக் கற்கள், 84.2 காரட் மஞ்சள் கற்கள் ஆகியவை நகைகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணிக்கம் மற்றும் மரகதக் கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தங்க கிரீடம், தங்க சங்கிலிகள், கால் கவசங்கள், கொலுசுகள், கை வளையல்கள், தோள் ஆபரணங்கள், காதணிகள், நாக வடிவ இடுப்புப் பட்டை உள்ளிட்ட பாரம்பரிய ஆபரணங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
காணிக்கையைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு
காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெயின் தம்பதியினரின் பக்தியையும் பெரும் கொடையையும் பாராட்டினார். திருமலை கோயிலுக்கு இத்தகைய பெரிய காணிக்கை வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நகைகளை தம்பதியினரும் அவர்களது குடும்பத்தினரும் பாரம்பரிய முறைப்படி தலையில் சுமந்து சென்று ஏழுமலையான் சன்னதியில் சமர்ப்பித்தனர். பின்னர் கோயில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 121 கிலோ தங்க நகைகளின் மொத்த மதிப்பு ரூ.207.6 கோடி ஆகும். ஏழுமலையான் கோயிலுக்கு தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கைகளில் ஒன்றாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
