
திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்லப் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் தடை விதித்துள்ளதோடு, மலைப் பாதையின் நுழைவு வாயிலில் தடுப்பு வேலிகளை (பேரிகார்டுகள்) அமைத்துப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலைப் பாதைக்குச் செல்லும் நுழைவு வாயில் வழியாக இன்று காலை முதல் அனைவரையும் காவல்துறையினர் அனுமதித்து வந்தனர். இந்நிலையில், தற்போது மலைப் பாதையின் நுழைவு வாயில் பகுதியில் பேரிகார்டுகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மலை உச்சிக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், மலை உச்சிக்குச் செல்வதற்காகப் பழனியாண்டவர் கோயில் அடிவாரத்தில் காத்திருக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம்
ஏற்றப்படுவதைக் காணத் தங்களை அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மலை உச்சிக்குப் பொதுமக்கள் ஏராளமானோர் சென்றால் அங்குப் பாதுகாப்பு வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மலை உச்சிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
