HomeBreaking Newsஆபாசக் குறுஞ்செய்தி வழக்கு: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஜாமீன் மனு தாக்கல்!

ஆபாசக் குறுஞ்செய்தி வழக்கு: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஜாமீன் மனு தாக்கல்!

-

- Advertisement -

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது செல்போன் மூலம் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது. மேலும், அவரது அரசு இல்லத்துக்குச் சென்று அத்துமீறி நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையைத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மேற்கொள்ள நியமிக்கப்பட்டார். மேலும், விசாரணையை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. காமினி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அருள் விக்னேஷை அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். பின்னர், கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை அதிகாலை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருள் விக்னேஷ், அங்குள்ள உயர் பாதுகாப்புப் பகுதியில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் உள்ள அருள் விக்னேஷ், ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்றும் வழக்கின் தற்போதைய விசாரணை நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜாமீன் மனு மீதான நீதிமன்றத்தின் முடிவு அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

“ஏன் இவ்வளவு தாமதம்? ஆட்சியருக்கே பாதுகாப்பில்லையா?” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது குறித்து சீமான் கேள்வி!

 

MUST READ