HomeBreaking Newsபட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 47 சவரன் கொள்ளை: பொள்ளாச்சி நோக்கி தப்பிய கும்பல்!

பட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 47 சவரன் கொள்ளை: பொள்ளாச்சி நோக்கி தப்பிய கும்பல்!

-

- Advertisement -

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த மர்மக் கும்பல், துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி 47 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கொள்ளையர்கள் தமிழ்நாடு எல்லையை நோக்கிச் சென்றிருப்பது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்துள்ளதால், இரு மாநிலக் காவல்துறையினரும் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

பாலக்காடு மாவட்டம் பெருங்கோட்டுக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘இஷான் கோல்ட்’ நகைக்கடையில் பிற்பகல் 3 மணி அளவில் இந்தத் துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது கடையின் உரிமையாளர் மதிய உணவு அருந்தச் சென்றிருந்த நிலையில், பெண் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்.

காரில் வந்த மூன்று நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் கடைக்குள் நுழைந்து மோதிரம் காட்டுமாறு கேட்டுள்ளனர். அவர்களின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சந்தேகம் அடைந்த பெண் ஊழியர், கடை மேலாளரை அழைத்துள்ளார். இதனால் சுதாரித்த அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளது.

தப்பிக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு

கடையிலிருந்த 47 சவரன் நகைகளைப் பெட்டிகளுடன் அள்ளிக்கொண்டு கொள்ளையர்கள் தப்ப முயன்றபோது, பெண் ஊழியர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் ஊழியர் நாற்காலியைத் தூக்கித் தாக்க முயன்றதுடன், கொள்ளையர்களைப் பின்தொடர்ந்து துரத்தியும் சென்றுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் ஏறித் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வடமாநிலக் கும்பலா? பொள்ளாச்சியில் தீவிர தேடல்

சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், நகைக்கடையில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியும் வருகின்றனர். கொள்ளையர்கள் இந்தியில் பேசியதாக ஊழியர்கள் தெரிவித்திருப்பதால், இதில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கொள்ளையர்கள் பயணித்த கார் கேரளா – தமிழ்நாடு எல்லையான கோபாலபுரம் வழியாகப் பொள்ளாச்சி நோக்கிச் சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் உதவியுடன் கேரளக் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமீப காலமாகத் தென்மாநிலங்களில் நகைக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், மதுரையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட யூடியூபர் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வங்கிகளை குறிவைத்து தொடர் மோசடி – தூத்துக்குடியில் பதுங்கியிருந்த 4 பேர் கைது!

MUST READ