திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர் ஜோதிகுமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் மதுரை மக்களின் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க உணர்வைப் பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலான உத்தரவுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூண் தீபத் தூணா அல்லது நில அளவைக் கல்லா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி முடிவெடுப்பதற்கு முன்பே, அங்கு தீபம் ஏற்ற உத்தரவிடுவது இறுதித் தீர்ப்புக்கு இணையானதாக அமைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!
திருப்பரங்குன்றம் தொடர்பான இடைக்காலத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தல்!
தமிழகத்தில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மத மோதல்கள் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக வழக்கறிஞர் ஜோதிகுமார் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
