திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை நீதிமன்றம் முன்பு பரபரப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், கடந்த 24ஆம் தேதி வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் ஏற்றப்படும் தீபத்தைக் கொண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே பக்தர்கள் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோயில் மற்றும் தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க மத்திய ரிசர்வ் காவல் படைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனுடன், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் வி.பார்த்திபன் ஆகியோரை கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்த உத்தரவு வழிவகுப்பதாகவும், இதனால் மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டித்தும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
