HomeBreaking Newsதமிழ்நாட்டின் நலனில் சமரசம் கிடையாது – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!

தமிழ்நாட்டின் நலனில் சமரசம் கிடையாது – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!

-

- Advertisement -

தமிழ்நாட்டின் நலனில் சமரசம் கிடையாது; தொகுதி மறுவரையறையில் நமது கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை!தமிழ்நாட்டின் நலனில் சமரசம் கிடையாது – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அவர் விரிவாகப் பேசினார். உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பிரச்சினையை திமுக அணுகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் தற்போது வெளியான மசோதா வரைவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும்போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வந்தது.

அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையக்கூடும் என்பதை இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரித்தது திமுகதான்.

இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் ஏற்படுத்தினோம். இந்திய அளவிலான தலைவர்களை அழைத்துக் கூட்டமும் நடத்தினோம்” என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் காலத்தில், மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல், உரிய உறுதிமொழிகளும் அளிக்காமல் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மசோதாவைப் படித்துப் பார்க்கக்கூட போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அவசரமாகக் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்து, பாஜகவுக்கு திமுக கடும் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பது திமுகவின் விருப்பமாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி தொகுதிகளை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதனால் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான நடைமுறைத் தீர்வை 2024ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத் தீர்மானம் மூலம் முன்வைத்ததாக ஸ்டாலின் கூறினார்.

“நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள்தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவப் பங்கை குறைத்திருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துள்ளது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

அந்த ஆபத்தைத் தடுத்துள்ளதாகவும், திமுக எதிர்பார்த்த வகையிலேயே தற்போது மசோதா வரைவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது என்பதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்றார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் தங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

1976ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 42இல் இருந்து 39ஆகக் குறைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதத்தில் மாற்றமின்றி தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய கடமையை நாம் செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள்.

கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் இருக்கக் கூடாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

இறுதியாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதாகக் குறிப்பிட்டு, “எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும்” என்ற கருத்தை நினைவுபடுத்திய ஸ்டாலின், அதற்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

MUST READ