திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை; மசோதாவை எதிர்த்தால் 39 தொகுதிகளும் குறைய வாய்ப்பு – தங்கம் தென்னரசு விளக்கம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், திமுக முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
மசோதாவை ஆதரிப்பதற்கான காரணம்
ஒன்றிய அரசு ஏற்கெனவே கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவில் தமிழ்நாட்டிற்குப் பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்ததால் அதனை திமுக எதிர்த்ததாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ‘நியாயமான தொகுதி மறுவரையறை’ (Fair Delimitation) வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக முன்வைத்ததாகத் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் மசோதாவை எதிர்க்காமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது திமுக வலியுறுத்திய அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் அதற்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
39 தொகுதிகள் குறைய வாய்ப்பு – எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனம்
புதிய மசோதாவை ஆதரிக்காமல் காங்கிரஸ் கட்சியின் கருத்தைக் கேட்டு எதிர்த்தால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகத் தங்கம் தென்னரசு எச்சரித்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கியப் பங்காற்றியுள்ளதாகப் புகழாரம் சூட்டிய அவர், தற்போது மசோதாவை ஆதரிக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்குத் துணைபோகும் வகையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி செயல்படக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், முன்பு திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் ‘நியாயமான தொகுதி மறுவரையறை’ என்ற நிலைப்பாட்டில்தான் இருந்ததாகவும், தற்போது அவை ‘தொகுதி மறுவரையறையே வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டிற்கு மாறியுள்ளதாகவும் விமர்சித்தார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் தரப்புக்கும் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என அவர் சாடினார்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், திமுகவின் ஆதரவு முடிவுக்கான காரணங்களைத் தங்கம் தென்னரசு இவ்வாறு விளக்கியுள்ளார்
