2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல் முறியடித்து வரலாறு படைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. ஆனால், தற்போது சதவீதக் கணக்குகளைக் காட்டி வஞ்சிக்கும் திட்டத்திற்கு திமுக உடன்பட்டுவிட்டதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை வீழ்த்தத் துடிக்கும் அரசியல் எதிரிகளிடையே இத்தகைய தகவல்கள் வேகமாகப் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என உரிமையுடன் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்!
பாஜகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எத்தகைய வாக்குறுதிகளை அளித்தாலும் அவற்றை உண்மையென நம்பிவிடக் கூடாது என கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். இந்தக் கட்டத்தில் என்ன சமாதானம் கூறினாலும் மக்கள் மன்றத்தில் திமுகவுக்குத் தீராத பழி ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் எடுக்கும் நிலைப்பாடே தமிழகத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்றும், தென் மாநிலங்களின் குரல் இந்திய அளவில் நசுக்கப்படுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேன் கலந்த விஷ உருண்டை: வீரமணி எச்சரிக்கை!
அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பெயரில் பாஜக முன்வைக்கும் திட்டத்தில் திமுக சிக்கினால், அது அரசியல் எதிரிகளுக்குத் தாமே வாய்ப்பளித்தது போல் ஆகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தது போல் ஆகிவிடக் கூடாது” என்ற பெருங்கவலையாலேயே இந்த அவசர வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உறவோடும் உரிமையோடும் இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டுவது தமது கசப்பான கடமை என்று குறிப்பிட்டுள்ள கி. வீரமணி, சிறிய சறுக்கல் கூடப் பெரிய விபத்தாக மாறிவிடக்கூடும் என்பதால் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக மிகவும் கவனமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
