கொடைக்கானலின் அடையாளமாகத் திகழும் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் 207-வது பிறந்தநாள் விழா, கொடைக்கானலில் மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் சுமார் 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற நட்சத்திர ஏரி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சர் ஹென்றி லெவின்ஜ், கடந்த 1864-ஆம் ஆண்டு இந்த ஏரியை செயற்கையாக உருவாக்கினார். அன்றுமுதல் இன்று வரை கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஏரி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
ஏரியில் படகு சவாரி செய்வது மட்டுமின்றி, அதன் கரையோரங்களில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்து வருகிறது. மேலும், இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அஞ்சுவீடு, பேத்துப்பாறை, வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பயன்படுவதுடன், பழனி பகுதி மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் நினைவாக, கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அந்த நினைவுத் தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்று அவரை நினைவுகூர்ந்தனர்.
இதற்கிடையே, கொடைக்கானலின் அடையாளமாகத் திகழும் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் பிறந்தநாளை, ஆண்டுதோறும் ‘நட்சத்திர ஏரி தின விழா’வாகத் தமிழக அரசு அறிவித்து கொண்டாட வேண்டும் என்றும், அவருக்கு நினைவுத் தூண் அமைந்துள்ள அதே பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் நடராஜ் கூறுகையில், கொடைக்கானலின் சுற்றுலா அடையாளமாகவும், மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய நீராதாரமாகவும் விளங்கும் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் நினைவைப் போற்றும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மருத்துவமனையில் இருந்தபடி 2021 பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றியைக் கண்டேன்: விராட் கோலி நெகிழ்ச்சி
