Homeசெய்திகள்கட்டுரைசென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90'ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு...

சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90’ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

-

- Advertisement -

சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற 90-களின் முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் ஒன்றுகூடி தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90'ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

இந்தச் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு இரண்டு புத்தகப் பீரோக்கள் மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கினர்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பல்வேறு இடங்களில் வசித்து வந்த நண்பர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, முன்னாள் மாணவர்கள் கடந்த நான்கு மாதங்களாக வாட்ஸ்அப் குழு மூலம் பழைய நண்பர்களைத் தேடி இணைத்துள்ளனர்.

இதன் பலனாக சென்னை மட்டுமின்றி திருச்சி, சேலம், கோயம்புத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் பள்ளிக்கு வருகை தந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர் ஒருவர் வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் இணைந்து நண்பர்களுடன் உரையாடியது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெயர் சொல்லி வருகைப்பதிவு – பழைய நினைவுகளில் மூழ்கிய மாணவர்கள்

பள்ளிப் பருவ நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் பெயர்களைக் கூறி வருகைப்பதிவு எடுத்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது பெயரைக் கேட்டு வருகை தெரிவிக்கும் அனுபவம் முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

அப்போது ஆசிரியர்கள் பேசுகையில், “அன்று சிறுவர்களாகப் பள்ளிக்கு வந்த மாணவர்கள், இன்று தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கு வருவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களிடம் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு அரசுத் துறைகளிலும், தொழில் துறைகளிலும் உயர்ந்த இடங்களை அடைந்து சாதித்து வருவது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர்ந்து, தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

90-களின் தின்பண்டங்கள் – மீண்டும் சிறுவயதுக்குச் சென்ற நண்பர்கள்சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90'ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

இந்தச் சந்திப்பின் மற்றொரு சிறப்பம்சமாக, 90-களில் மாணவர்கள் விரும்பி சாப்பிட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேன் மிட்டாய், கமர்கட், குச்சி ஐஸ், ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட அக்காலத்தின் பிரபலமான தின்பண்டங்களைச் சுவைத்த முன்னாள் மாணவர்கள், தங்களது சிறுவயது அனுபவங்களையும் பள்ளி நாட்களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90'ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

இன்றைய மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் அறிவுரை

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாணவர்கள், இன்றைய தலைமுறை மாணவர்கள் விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் காட்டாமல் செல்போன்களில் அதிக நேரம் செலவிடுவதாகக் கவலை தெரிவித்தனர். தாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் மைதான விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உடல் வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், தற்போதைய மாணவர்களும் செல்போன் பயன்பாட்டைக் குறைத்து விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி உடல் ஆரோக்கியத்துடன் சாதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், தாங்கள் படித்த காலத்தில் கரும்பலகை மூலம் பாடம் கற்ற அரசுப் பள்ளி, தற்போது நவீன மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளியில் உள்ள நவீனக் கல்வி வசதிகளை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பள்ளிக்கு இரண்டு புத்தகப் பீரோக்கள் – தொடர்ந்து உதவுவதாக உறுதி

தாங்கள் படித்து வளர்ந்த அரசுப் பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் புத்தகங்கள் வைப்பதற்கான இரண்டு பீரோக்கள் மற்றும் தேவையான கல்வி உபகரணங்களைப் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.

இதோடு நிறுத்திக்கொள்ளாமல், இனி ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை இதேபோல் அனைவரும் ஒன்றுகூடி, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி உபகரணங்களைத் தொடர்ந்து வழங்குவோம் என்றும் உறுதியளித்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டதுடன், பள்ளி நாட்களின் மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

குழந்தைகளாகப் படித்த பள்ளிக்குக் குடும்பத்தினருடனும் தங்களது குழந்தைகளுடனும் திரும்பி வந்த இந்தச் சந்திப்பு, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இனி மனிதர்களுக்கு வேலையே இருக்காதா? இன்னும் 15 மாதங்களில் ஏ.ஐ. செய்யப்போகும் அதிரடி மாற்றம் – ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

MUST READ