
எழுத்தில் தனக்கென தனி பாணியை வைத்திருந்த கலைஞர் கருணாநிதி, பத்திரிகை உலகத்தை தாண்டி திரையுலகில் பிரவேசிப்பதற்காக திருவாரூரில் இருந்து புறப்பட்டு சேலத்தில் சென்று தங்கியிருந்தார். அங்குதான் எம்.ஜி.ஆருடன் பழக்கம் ஏற்பட்டு ‘மந்திரிகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார். அந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் தனது ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத கலைஞரை தேர்வு செய்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
இப்போது தமிழ்சினிமா என்றால் சென்னை கோடம்பாக்கம் என்று சொல்லுவதை போல, அப்போது தமிழ்சினிமா படப்பிடிப்புகள் என்றாலே சேலம்தான் என்ற நிலை இருந்தது. சேலத்தில் தான் தங்கி இருந்த விடுதிக்கே கலைஞரை அழைத்து சென்றார் கலைவாணர்.


மந்திரிகுமாரி படம் எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸில் தங்கி இருந்த கலைஞரை காரில் அழைத்துச்சென்றபோது, மணமகள் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வேண்டும்? என்று கலைவாணர் கேட்க, உங்கள் விருப்பம் என்று கலைஞர் சொல்ல, ஒரு துண்டு சீட்டில் நான்கு பூஜ்ஜியங்கள் போட்டு இது போதுமா? என்று கேட்க, கலைஞரும் சரி என்று சொல்ல, இல்லை இது சரியில்லை . ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, நான்கு பூஜ்ஜியங்களுக்கு அப்பால் ஒன்று என எழுதி கொடுத்து, இப்போது சம்மதமா? என்று கேட்க, கலைஞர் அந்த துண்டு சீட்டை திருப்பி காட்டி, இது சம்மதம் என்று சொல்ல, கலைஞர் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டு போனார் கலைவாணர்.
00001 என்று கலைவாணர் எழுதி கொடுத்ததை 10000 என்று சாமர்த்தியமாக கலைஞர் காட்டினாலும், சம்மதம் என்று சொல்லிவிட்டார் கலைவாணர். அந்த காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் என்றால் மிகப்பெரிய சம்பளம். கலைஞர் விளையாட்டுக்காக அப்படி காட்டினாலும் அந்த சம்பளத்தையே கொடுத்து அசத்திவிட்டார் கலைவாணர்.

சேலத்தில் இருந்தால் சினிமா வாய்ப்புகள் அதிகம் வராது. அதனால் சென்னைக்கு வந்துவிடச்சொல்லி கலைவாணர் கேட்டபோது, தனது சூழ்நிலையை சொல்லி கலைஞர் மறுக்க, சென்னை தி.நகரில் கலைவாணரே வாடகைக்கு வீடு எடுத்துவிட்டார். காலை மாலை என்று தினந்தோறும் கலைஞரை சென்று சந்தித்து பேசி, கடற்கரைக்கும் அழைத்து சென்று சினிமா, அரசியல், சமூகநீதி என்று பேசி வந்தார்கள்.
மணமகள் படத்திற்காக மொட்டை மாடியில் அமர்ந்து கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதியபோது, திடீரென்று காற்று பலமாக வீச, எழுதி வைத்த காகிதங்கள் எல்லாம் பறந்துவிட, எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்தார் கலைவாணர். எழுத்து சிந்தனையில் இருந்த கலைஞருக்கு காகிதங்கள் காற்றில் பறந்ததும், அதை கலைவாணர் சேகரித்து வைத்ததும் தெரியவில்லை. பின்னர் அதை பார்த்துவிட்டு பதறிப்போய், இவ்வளவு பெரிய நபர் நீங்கள் எனக்காக இப்படி ஒரு வேலையை செய்துவிட்டீர்களே? நான் கவனிக்கவில்லையே என்று கலைஞர் பதற, உன் எழுத்துக்கு என் சன்மானம் இது என்று சிரித்தார் கலைவாணர்.
கலைஞருக்கு காய்ச்சல் என்று கேள்விப்பட்டதும், தனது கலையுலக நண்பர்களை அழைத்துக்கொண்டு , தி.நகரில் கலைஞர் தங்கி இருந்த வீட்டிற்கே போய்விட்டார் கலைவாணர். கலைஞருக்கு கார் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது கலைவாணரின் விருப்பம். பேரறிஞர் அண்ணாவுக்கும் முதன் முதலில் கார் வாங்கி கொடுத்தது கலைவாணர்தான்.

கலைஞருக்கு கார் வாங்கிக்கொடுப்பதை எப்படி செய்தார் தெரியுமா? உடம்புக்கு சரியில்லாமல் படுத்திருந்த கலைஞரை, சீட்டாடினால் உடம்பு சுகமாகும் என்று சொல்லி சீட்டாட வைத்து, தன்னிடம் பணம் இல்லை என்று சொன்ன கலைஞரிடம், தானே பணத்தை கொடுத்து சீட்டாட வைத்தார். அந்த சீட்டாட்டத்தில் கலைஞர் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும்படி கலைவாணரும், அவருடன் சென்றிருந்த கலையுலக நண்பர்களும் தோற்றுவிடுகிறார்கள்.
அந்த 5 ஆயிரம் பணத்துடன் மேற்கொண்டு பணத்தை போட்டு புது கார் வாங்கி, மறுநாளே கலைஞர் வீட்டு வாசலில் நிறுத்தி, அந்த காரில் கலைஞரை உட்காரை வைத்து அழைத்து சென்று மகிழ்ந்தார் கலைவாணர்.
ஒருநாள் அந்த காரில் கலைவாணர் வீட்டிற்குச் சென்று இருந்தார் கலைஞர் . கலைவாணருடன் மாடியில் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கலைஞரின் கார் டிரைவர், காரில் பெட்ரோல் இல்லை என்று கலைவாணரின் உதவியாளர் செல்லமுத்துவிடம் சொல்ல, அங்கு கலைவாணரின் நிறுவனத்தில் இருந்த மேனேஜரிடம் சொல்லி, கலைஞரின் காருக்கு பெட்ரோல் போட பணம் கேட்டிருக்கிறார்.
அந்த மேனேஜர், ஒரு பெட்ரோல் கூப்பனை செல்லமுத்துவிடம் கொடுத்துவிட்டு, ( அந்த காலத்தில் பணக்காரர்கள் எல்லாம் பெட்ரோல் பங்குகளில் இருந்து பணம் கட்டி கூப்பன்களை மொத்தமாக வாங்கி வைத்து விடுவார்கள். தேவைப்படும்போது அந்த கூப்பனை கொடுத்து பெட்ரோல் போட்டுக்கொள்வார்கள். தெரிந்தவர்களுக்கு இந்த கூப்பனை கொடுத்துவிடுவார்கள். ஓட்டல்களிலும் இப்படி பணம் கட்டி கூப்பனை வாங்கி வைத்துக்கொண்டு தன்னை சந்திக்க வருவோரிடம் கூப்பன் கொடுத்து சாப்பிடச்சொல்லும் வழக்கம் இருந்தது) இனிமேல் இப்படி கலைவாணர் வீட்டு பணத்தை அழிக்காதே என்று ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த விபரத்தை கலைஞருக்கு தெரியப்படுத்தவில்லை டிரைவர். மறுநாள் இந்த விஷயத்தை கலைவாணரிடம் சொல்லி இருக்கிறார் அந்த மேனேஜர் . சொல்லிவிட்டு கலைவாணரிடம் தான் நல்ல பெயர் எடுக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் கலைவாணரோ அந்த மேனேஜரை போட்டு திட்டிவிட்டார் . உடனே வேலையை விட்டும் அவரை நீக்கிவிட்டார்.
ஆயிரம் பெட்ரோல் கூப்பன்களை எடுத்துக்கொண்டு கலைஞர் வீட்டிற்கு சென்றார் கலைவாணர். அந்த நேரத்தில் கலைஞர் வீட்டில் இல்லை . உடனே கலைஞரின் அம்மாவிடம் அந்த ஆயிரம் பெட்ரோல் கூப்பன்களை கொடுத்து தேவையான பெட்ரோலை தம்பியை போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .

இந்த விவரங்கள் தெரிந்த கலைஞர், ஆயிரம் கூப்பன்களையும் எடுத்துக்கொண்டு கலைவாணரிடம் சென்று, அந்த பெட்ரோல் கூப்பன்களை கொடுத்து விட்டு, தேவையென்றால் வாங்கிக் கொள்கிறேன். இப்பொழுது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, வேலையை நீக்கம் செய்த மேனேஜரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி சமாதானப்படுத்த முயன்றார் கலைஞர். அப்போது கலைவாணர் கலைஞரை கட்டி தழுவி, நடந்த விஷயத்திற்காக வருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
கலைவாணரை விட வயதில் ரொம்ப இளையவர் கலைஞர். எழுத்துக்கு, திறமைக்கு ஏது வயது? அது மட்டுமல்ல, தோழமைக்கு ஏது வயது வித்தியாசம்?
கலைஞர் கருணாநிதி 100ஆவது பிறந்தநாள் நினைவு இது.


