தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தவறுதலாக ஸ்பிரிட் கொடுக்கப்பட்டதால் 8 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் – தீபா தம்பதியரின் 8 வயது மகள் அகல்யாவுக்கு கடந்த ஒன்றரை வருடமாக சிறுநீரக செயல்பாட்டு குறைவு காரணமாக புதுவை, சென்னை, தஞ்சையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அகல்யாவுக்கு உயர் சிகிச்சை எதிர்பார்த்து கடந்த மே 30 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இங்கு இருமுறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த சூழலில் நேற்று (ஜூன் 15) மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது இரத்த அழுத்தம் உயர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக படுக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை (Surgical spirit) தண்ணீர் என நினைத்து அவரது தாயார் எடுத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. குடித்த பின்னர் அது தண்ணீர் என தெரிந்து குழந்தை துப்பியுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
டயாலிசிஸ் வார்டில் அலட்சியமாக ஸ்பிரிட்டை வைத்திருந்ததும், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததும் குழந்தை இறப்புக்கு காரணம் என தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.