2வது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 4,791 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 2,605 ஏக்கர் நிலங்கள் நஞ்சை நிலமாக உள்ளது. மீதி நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “ பரந்தூரில் அமைய விருக்கும் புதிய விமான நிலையத்திட்டத்தை செயல் படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு என்றார்”. மேலும் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் பயணத்தில் இது மற்றொரு மையில்கல் என்று அறிவித்தார். அது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது.

இதற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், வளந்தூர், கொடவூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் அந்த விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழுவினர், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



