தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்- 60 பேர் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் இன்று 3-வது நாளாக காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 28-ம் தேதி சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில்உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். நேற்று இரவு கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்நிலையில், 3-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி முன்னுரிமை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ‘டெட்’ ஆசிரியர்களுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியோரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் 5 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
