கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் நாயகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. அதே சமயம் இப்படம் மல்டி ஸ்டார் படமாக தயாராக இருக்கிறது. அதன்படி இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் புதிய வரவாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னதாக ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.