ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட ராவான படங்களை இயக்கியவர் தான் அருண் மாதேஸ்வரன். இவர் நடிப்பு அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகியிருந்தது. அருண் மாதேஸ்வரனுக்கும் தனுஷுக்கும் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய படங்களில் பெண்களை மிக தைரியமானவர்களாக காட்டுவார். அதேபோலவே இதுவரை காதல் படங்களை மட்டுமே நடித்து வந்த பிரியங்கா அருள் மோகனை மிகவும் வித்தியாசமான பரிமாணத்தில் காட்டியுள்ளார் அருண் மாதேஸ்வரன். அதேசமயம் ஜெயிலர் படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்த சிவராஜ்குமார், கேப்டன் மில்லரில் தனுஷுக்கு அண்ணனாக மிரட்டி இருந்தார். அதிதி பாலன், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கோக்கென், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் தங்களின் நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் தனது அசுர நடிப்பினால் படம் முழுவதையும் தாங்கி பிடித்துள்ளார் தனுஷ்.
அந்த வகையில் சுதந்திரத்திற்காக போராடிய காலகட்டத்தில் சுயமரியாதைக்காகவும், கோயில் நுழைவு உரிமைக்காகவும் போராடும் ஒடுக்கப்பட்டவர்களின் கதையை கூறுகிறது கேப்டன் மில்லர். ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அதே சமயம் வெளியான முதல் நாளில் ரூ. 8.75 கோடி வரை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இனிவரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படம் அதிக வசூலை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் கேப்டன் மில்லர் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.