சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அடுத்ததாக சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி, ஜித்து மாதவன், பா. ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அதில் வெங்கி அட்லுரி இயக்கும் ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ‘சூர்யா 47’ படம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை சூர்யா, தான் புதிதாக தொடங்கியுள்ள ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ளார் எனவும் இந்தப் படத்தை ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் மாஸ் கமர்சியல் என்டர்டெயினர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் நஸ்ரியா இதில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் சுசின் ஷியாம் இதற்கு இசையமைக்கப் போகிறார் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதம் எர்ணாகுளத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா 47 படப்பிடிப்பு 2025 டிசம்பர் மாத இறுதியில் அல்லது 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.