நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, அந்தப் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அந்நிய சக்திகள் இந்தியாவில் பிரச்சினைகளை உருவாக்குவது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட புகார்கள் தீவிரமானவை என்பதால், அவற்றை எளிதில் புறக்கணிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்டு) மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தேவையான அவகாசம் வழங்கப்படவில்லை என்பது தவறு என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவு குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் எந்தவிதமான கோரிக்கையையும் சென்சார் போர்டிடம் முன்வைக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மறுதணிக்கை தொடர்பான சென்சார் போர்டின் முடிவுக்கு எதிராக முறையாக கோரிக்கை வைக்காமல், நேரடியாக நீதிமன்றத்தை நாடியது உகந்ததல்ல என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைக்காத நிலையில், அந்த முடிவை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதால், படத்தை மறுதணிக்கைக்கு அனுப்புவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


