சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மைதீன் என்பவர், ட்ரை ஃப்ரூட்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
அவருக்கு நன்கு பழக்கமான நஜீம் என்பவர், பல்வேறு வங்கி கணக்குகளை மைதீனிடம் கொடுத்து, லட்சக்கணக்கான ரூபாயை ஏடிஎம் மையம் மூலம் டெபாசிட் செய்ய கூறியுள்ளார்.
இதுபோன்று பல வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில், ஒரு லட்சத்தை டெபாசிட் செய்தால், அதற்கு கமிஷன் தொகையாக, ஆயிரம் ரூபாய் தருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், நஜீம் நேற்று இரவு மைதியினிடம் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னதின் பேரில், மைதீன் சென்னை தேனாம்பேட்டை எல்டம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்திற்கு வந்து, 4 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தார்.
பின்னர், மீதமுள்ள ஐந்து லட்சம் ரூபாயை வேறொரு ஏடிஎம் மையத்திற்கு எடுத்துச் செல்லும் போது, வங்கி வாசலில் காத்திருந்த கும்பல் ஒன்று, அவரை ஆயுதங்களால் மிரட்டி அவர் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று, பல்வேறு வங்கி ஏடிஎம் மையங்களில் டெபாசிட் செய்யும் பணம், ஹவாலா பணமா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மைதீனிடம் நடத்திய விசாரணையில், அவர் இது ஹவாலா பணம் தான் என போலீஸிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தன்னிடம் கைவரிசை காட்டிய மூன்று பேரில் இரண்டு பேர் முகத்தில் கர்சிப் கட்டி இருந்ததாகவும், Honda activaவில் அவர்கள் மூன்று பேரும் சென்றதாகவும், அந்த வாகனத்தின் எண்ணையும் மைதீன் போலீஸாரிடம் தெரிவித்தார்.
ஆனால் கைவரிசை காட்டிய நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் போலியானது என தெரிய வந்தது.
மைதீன் குறிப்பிட்ட நம்பர் ஒரு புல்லட் இருசக்கர வாகனத்தினுடையது எனவும் தெரியவந்தது.
மைதீனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யக்கூடிய நபர்கள், காவலாளிகள் பணியாற்றக்கூடிய ஏடிஎம்( cash deposit machine) CDM மையங்களுக்கு செல்ல மாட்டார்கள்.
காவலாளிகள் இல்லாத மையங்களாக பார்த்து தான் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள்.