பொய்யை பெரிதாக்கு; அதை எளிமையாக்கு; திரும்பத் திரும்ப சொல்; மக்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள்- ஹிட்லரின் பொன்மொழி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு வழியில் நிர்வாகத்தை சீர்குலைப்பது, அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அதன் மூலம் திமுக அரசுக்கு கெட்டப்பெயரை உருவாக்குவதிலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக வை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த துருப்பிடித்த திட்டத்தை, பொய்யான பரப்புரையை ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
ஒரு மாநில அரசு மக்களுக்கு செய்த பணிகளை, சேவைகளை, சாதனைகளை, மேலும் தொடர்ந்து செய்யக்கூடிய திட்டங்களை ஆண்டின் தொடக்கத்தில் கூடுகின்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிக்கையாக தயாரித்து ஆளுநரை வாசிக்க வைப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள நடைமுறை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு தயாரித்த அறிக்கையை வாசிக்க மறுக்கிறார், கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறுகிறார், மரபுகளை மீறுகிறார், அரசியலமைப்பு சட்டத்தை தூசியாக கருதுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை, அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொள்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கொடுக்கக் கூடாத குடைச்சலை கொடுத்து வருகிறார். மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் தடுக்கிறார். மொத்தத்தில் தமிழ் மொழியை, தமிழ்நாட்டை, மக்களை அவமானப்படுத்தி வருகிறார்.
சட்டமன்ற கூட்டத் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும் கூட்டம் நிறைவுபெறும் போது தேசிய கீதமும் பாடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நடைமுறையை மாற்றி இரண்டு முறை தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு ஏற்க மறுக்கிறது, அது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்கிற ‘சொத்தையான’, தவறான, வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடினால் ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்கிறார். அவருடைய நோக்கம் என்ன?
ஆளுநர் மாளிகையில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். தமிழர்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த நிகழ்ச்சிகளில் தேசியக் கீதத்தை இரண்டு மூன்று முறை பாடிக் கொள்வதை யார் தடுத்தார்கள்? அவருக்கு தேசியக் கீதத்தின் மீது பற்றோ பாசமோ கிடையாது. சட்டமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், அதை இரண்டு மூன்று நாட்களுக்கு விவாதப் பொருளாக மாற்ற வேண்டும்.
இதைதான் ஹிட்லரும் செய்வார்.
பொய்யை ஒரு தந்திரமாக கையாளும்போது அது அணுவைப் போல பல மடங்கு ஆற்றல் பெறுகிறது. காலையில் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டாள், அது ஊரைச் சுற்றி பலருடைய வாய்களில் உருமாற்றம் பெற்று மாலையில் அது நம்புவதற்குறிய கருத்தாக மாறிவிடும்.
இதை தான் ஆளுநர் ரவி செய்து வருகிறார், ஒன்றிய அரசும் செய்து வருகின்றது. அதற்கான பலன் அவர்களுக்கு கிடைப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டமும், நோக்கமும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
தமிழர்கள் அரிசி எது, நொய் எது, உமி எது என்று பக்குவமாக பிரிக்க தெரிந்தவர்கள். உண்மை எது? பொய் எது? போலி எது என்று தெளிவாக புரிந்து கொள்கின்ற ஆற்றல் பெற்றவர்கள். அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ்- பாஜக வினர் போடும் நாடகங்கள் எதுவும் எடுபடாது.
ஒரு ஆளுநர் எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய மறுக்கிறார், எதையெல்லாம் செய்யக்கூடாதோ, விதிமுறைக்கு மாறானதோ அதை மட்டும் செய்கிறார்.
இப்போது ஆளுநர் பதவி மாநிலத்திற்கு அவசியமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் ஆளுநரை கண்டித்து வருகின்றனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நாடாளுமன்றம் நினைத்தால், முடிவு செய்தால் ஒரு ஒற்றை தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசு தலைவரை நீக்க முடியும். ஆனால் மாநில அரசு நினைத்தால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முடியாது. மாநில சட்டமன்றத்திற்கும் ஆளுநரை நீக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்கான முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்.
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் அவசியமா என்ற வரிகளும், அந்த வைரவரிகளுக்கு சொந்தக்காரர் தீர்க்கதரிசி அறிஞர் அண்ணாவும் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து கொள்வோம்.