Homeசெய்திகள்க்ரைம்அன்பு ஜோதி ஆசிரமத்தில் புதைந்து கிடக்கும் மர்மம் - சி.பி.சி.ஐ.டி கிடுக்கு பிடி விசாரணை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் புதைந்து கிடக்கும் மர்மம் – சி.பி.சி.ஐ.டி கிடுக்கு பிடி விசாரணை

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம்,  குண்டலிப்புலியூர் கிராமத்தில் இருந்தது அன்பு ஜோதி ஆசிரமம். கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் நிர்வகித்துவந்த இந்த ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

 

we-r-hiring

சில மாதங்களுக்கு முன்பு இந்த ‘ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த என் மாமாவைக் காணவில்லை’ என சலீம்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து போலீஸாரும் வருவாய்த்துறையினரும் ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தான்  ஆசிரமத்தில் நடந்துவந்த அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியவந்தன.

“ஆசிரமத்திலுள்ள பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதுடன், அவர்களை வியாபார நோக்கத்தில் விற்பனை செய்வதாகச் சந்தேகம் இருப்பதாக  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆசிரமத்தின் உரிமையாளரான ஜூபின் பேபி, அவரின் மனைவி மரியா, பணியாளர்கள் பிஜூ மோகன், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கை  சி.பி.சி.ஐ.டி(CBCID)-க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கைதுசெய்யப்பட்ட பிஜூ மோகன் என்ற பணியாளரிடம்   வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் “ஜூபின் பேபி என் உறவினர். கடந்த மூன்று வருடங்களாக குண்டலம்புலியூரில் அவரது அன்பு ஜோதி ஆசிரமத்தில் 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்தேன். ஜூபின் பேபியும், மரியாவும் சொல்லும் ஆட்களை ஆசிரமத்துக்கு அழைத்து வருவதற்கும், மீண்டும் அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் விடுவதற்கும் அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். ஆதரவற்றவர்களையும், கணவனை இழந்தவர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மொட்டையடித்து, அவர்களின் தொடர்பான அடையாளங்களை ஜூபின் உத்தரவுப்படி அழித்துவிடுவோம்.

அதன் பிறகு அவர்களைப் புகைப்படம் எடுத்து பராமரிப்புக்காக, ஜூபினும் மரியாவும் வெளிநாட்டினரிடம் பணம் வாங்குவார்கள். அதன் பிறகு இங்கிருப்பவர்களை பெங்களூரு, கேரளா காசா்கோடு, ராஜஸ்தான், வேலூர் வாணியம்பாடி, விழுப்புரம், ஓசூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆசிரமங்களில் விடச் சொல்வார்கள். அவர்களை வாங்கிக்கொள்ளும் அந்த ஆசிரமங்கள் அதற்காக ஜூபினுக்குப் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தில் எங்களுக்கும் ஜூபின் கொஞ்சம் கொடுப்பார். எங்கள் பராமரிப்பில் இருப்பவர்கள் இறந்து போகும்போது நாங்களே தகனம் செய்துவிடுவோம். அதேபோல மற்ற ஆசிரமங்களில் நாங்கள் அனுப்பியவர்கள் இறந்துபோனால், அவர்களை அங்கேயே தகனம் செய்யச் சொல்லும் ஜூபின் பேபி, அதற்காக கெடார் காவல் நிலைய எஸ்.ஐ கொடுத்தது போன்ற ஒரு கடிதத்தை தயார்செய்து கொடுத்து அனுப்புவார். அதன் நகல்களை அலுவலக கம்ப்யூட்டரில் மறைத்துவைத்திருக்கிறேன்.

ஆசிரமத்தில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தி ஜூபினுடன் சேர்ந்து வேலை வாங்குவோம். வேலை செய்யாதவர்களை அடித்து, சங்கிலியால் கட்டிப்போட்டு, சாப்பாடு தராமல் எங்களுக்கு பயந்து நடக்க வைப்போம். மேலும், அவர்களைக் குரங்குகளைவிட்டும் கடிக்க வைப்பார் ஜூபின். அதனால் எங்களைப் பார்த்தாலே அவர்கள் பயந்து நடுங்குவார்கள். சலீம்கான், அவருடைய மாமாவை எங்களிடம் விட்ட மறுநாளே, அவரையும் சேர்த்து 53 பேரை ஜூபின் பேபி, மரியாவுடன் சேர்ந்து பெங்களூர் கே.ஆர்.சி ரோட்டிலுள்ள டோடாகுபி கிராமத்தில் ஆட்டோ ராஜா நடத்திவரும் நியூ ஆர்க் மிஷன் ஆஃப் இந்தியா (Home of Hope) என்ற ஆசிரமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டுவந்தோம் என்றார்.

எங்கள் ஆசிரமத்தில் ரீனா, ராக்கி (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) என்ற இரு பெண்கள் இருக்கின்றனர்.

இதேபோல அய்யப்பன், முத்துமாரி என்ற இரு பணியாளர்களும் தங்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட மனித உரிமைக் காப்பாளர் லலிதா நம்மிடம் பேசியபோது, ‘‘ஆசிரமத்துக்கு முறையான அனுமதி எதுவும் பெறாத நிலையில், இந்தியா முழுவதும் பல காப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஆட்களைக் கடத்தி வியாபாரம் செய்திருக்கிறார் ஜூபின். இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தியுள்ள ஆசிரமம் குறித்த புகார் எதுவும் பின்பற்றப்பட வில்லை.

இந்த ஆசிரம உரிமையாளரைத் தாண்டி கெடார் காவல்துறை மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் தங்களது கடமைகளைச் செய்யத் தவறியிருக்கின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, அந்த ஆசிரமத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைக்கூட வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவிடம் விளக்கம் கேட்டபோது, “இந்த ஆசிரமத்திலிருந்து 142 பேரையும், சின்ன முதலியார்சாவடிக் கிளையிலிருந்து 24 பேரையும் மீட்டிருக்கிறோம். தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதார் போன்ற அடையாள அட்டைகள் வேண்டும். அதை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரம நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும், ஆசிரமத்திலுள்ள குறைகளை அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். அவர்கள் திருத்திக்கொள்ளாதபோது மெமோ கொடுத்திருக்கிறோம்” என்றார்.

தமிழக அளவிலுள்ள ஆசிரமங்களை ஆய்வுசெய்யக் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குமாறு செய்தால்தான், இது போன்ற கொடூரச் சம்பவங்கள் அரங்கேறாமல் தடுத்து நிறுத்த முடியும்!

 

MUST READ