வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், புயலை எதிர்கொள்ள மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
அமராவதியில் இருந்தபடி காணொளி வாயிலாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அர்னாப்’ புயலைவிட ‘அக்வான்’ புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு
புயல் காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
கடலில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மின்சாரம் மற்றும் சாலைப் போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க ஏற்பாடு
புயல் கரையைக் கடந்த பிறகு சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படலாம்; மின்கம்பிகள் அறுந்து மின்சார விநியோகமும் தடைபடலாம். எனவே, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், புயல் கடந்ததும் சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றி, அறுந்த மின்கம்பிகளைச் சீரமைத்து விரைவாக மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
நவம்பர் 20-ம் தேதி ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் என கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவம்பர் 16-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘அக்வான்’ புயல் வலுப்பெற்று நவம்பர் 19-ம் தேதி தீவிரப் புயலாக மாறக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரையில் நெல்லூர் – துனி இடையே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் 145 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் நகர்வு மற்றும் தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
ஆந்திராவை நோக்கி நகரும் ‘அக்வான்’ புயல்: நவ. 20-இல் கரையைக் கடக்கிறது!
