HomeBreaking Newsகிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி பெயரில் போலி இணையதளம்- கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி பெயரில் போலி இணையதளம்- கலெக்டர் எச்சரிக்கை

-

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி பெயரில் போலி இணையதளம் – பொதுமக்கள், மாணவர்கள் ஏமாற வேண்டாம் – ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி, மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறுவதாக போலி ஆணை வெளியிட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அலுவல் முத்திரை சின்னம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அலுவல் முத்திரை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் https://gmckrishnagiri.org/ என்கிற போலியான இணையதள முகவரி உருவாக்கி உள்ளனர். அதில், இக்கல்லூரியின் பெயரில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2024-25க்கான போலி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிட்டுள்ளனர். அந்த போலி ஆணையில், 2 மாணவர்களின் பெயருடன் நீட் பதிவு எண், மாணவர்களின் பெற்றோரின் பெயர்கள், கல்லூரி கட்டண விவரங்களுடன் மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரங்களும் இடம் பெற்றுள்ளது.

இதுபோன்ற போலியான இணையதள முகவரி எதுவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையால் உருவாக்கம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடத்தப்படுவதில்லை. மருத்துவ மாணவர் குழுவின் மூலம் மட்டுமே சேர்ககை நடைபெறுகிறது. குறிப்பாக இந்திய அளவில் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவும், மாநில அளவில் நீட் தேர்ச்சி மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு மூலம் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, இதுபோன்ற போலியான இணையதள முகவரியை நம்பி பணம் செலுத்தவோ அல்லது நேரடியாக மாணவர் சேர்க்கை போன்ற போலியான ஆணைகளை கண்டு, பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட எவரும் ஏமாற வேண்டாம். இதுபோன்ற போலியான உத்தரவுளை கண்டு பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பு ஏற்காது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கே.எம்.சரயு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

MUST READ