ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் படத்தினை தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 நாட்கள் நடத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில் ரஜினி சென்னை திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினியிடம் ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, “ஜெயிலர் 2 படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும்” என்று அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோரை தவிர மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.