விஜய் ஆண்டனியின் மார்கன் பட டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வள்ளி மயில், லாயர் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இசையும் அமைத்துள்ளார். இந்த படமானது கிரைம் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் ஏற்கனவே நிறைவடைந்து வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி படமானது திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில் கொலைகாரன் ஒருவன் அடுத்தடுத்த கொலைகளை செய்கிறான். அவன் கொலை செய்யும்போது கொடிய கெமிக்கல் பயன்படுத்தி உடம்பெல்லாம் கருக வைக்கிறான்.

ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனியும் அவனுடைய தாக்குதலுக்கு ஆளாகின்றார். அதன் பிறகு விஜய் ஆண்டனி, அந்த கொலைகாரனை கைது செய்து விசாரணை நடத்துகிறார். அந்த கொலைகாரன் எதற்காக கொலைகளை செய்கிறான்? அவனுடைய நோக்கம் என்ன? என்பதை கண்டறிவது தான் படத்தின் மீதி கதை போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இணையத்திலும் வைரலாகி வருகிறது.


