செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.

திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்ற போது, இவரது வங்கி கணக்கிலிருந்து 3 லட்ச ரூபாய் வரை சிறுக சிறுக பணம் எடுத்திருப்பதை கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே பணம் காணாமல் போனது குறித்து மருத்துவர் ராமசந்திரன் இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரானது தி நகர் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவரின் வங்கி கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் கே.கே நகரில் உள்ள ஒரு செல்போன் கடையில் அடிக்கடி பணம் ஜிபே மூலமாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கே.கே நகரில் உள்ள அந்த செல்போன் கடைக்கு சென்று விசாரணை நடத்திய போது சிறுவன் ஒருவன், அடிக்கடி வந்து ஜிபே மூலமாக கடையின் உரிமையாளருக்கு பணத்தை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த சிறுவன் மருத்துவர் ராமசந்திரனின் உறவினரின் மகன் என்பதும், 14 வயது சிறுவன் மருத்துவரின் வீட்டில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன், மருத்துவர் ராமசந்திரனின் வீட்டில் தங்கி சில வருடங்களாக படித்து வருகிறார். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்த சிறுவன் மருத்துவர் ராமசந்திரனின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளான். ஆனால் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது கடினம் என்பதால், மருத்துவரின் வங்கி கணக்கை வைத்து அவரது மனைவி செல்போனில் ஜிபே பதிவு செய்திருப்பது சிறுவனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவன், ராமசந்திரனின் மனைவியின் செல்போனை தெரியாமல் எடுத்து வந்து சிறுவனுக்கு நன்கு பழக்கமான கே.கே நகரில் உள்ள செல்போன் கடையின் உரிமையாளரிடம் கொடுத்து,ஜிபே மூலமாக சிறுக சிறுக 3லட்சம் ரூபாய் வரை அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் அனுப்பிய பணத்தில் கடை உரிமையாளர் கமிஷனாக பாதி தொகையை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை சிறுவனுக்கு கொடுத்துள்ளார். திருடிய 3 லட்சம் ரூபாய் பணத்தில் 1.5 லட்ச ரூபாயை கடை உரிமையாளர் கமிஷனாக பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடிய பணத்தில சிறுவன் விலையுயர்ந்த லேப்டாப், விலையுயர்ந்த ஆடை மற்றும் நண்பர்களுடன் மதுபான விருந்து என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளரிடமிருந்து 1.5லட்ச ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.