பெண்களுக்கு முதலீட்டுப் பழக்கத்தை ஊக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார். எனவே பெண்களும் பெண் குழந்தைகளுக்கும் எதிர்கால தேவைக்காக இந்த சேமிப்பு திட்த்தில் சேரலாம் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மகிளா சம்மன் பத்திரங்களுக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்திற்கும் வித்தியாசம் என்ன? இவற்றில் கூடுதல் வருவாய் தருவது எதுவென்று சற்று பார்க்கலாம்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமா மகிளா சம்மான் பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. 2 ஆண்டுகளில் இந்த பத்திரங்கள் முதிர்வு பெறும் என்பதால் அதிகபட்சமாக இதில் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்படும. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த திட்டத்தில் முதிர்வு தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னேரே எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அது. மகிளா சம்மான் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையில் வரும் வருமானத்திற்கு வருமான வரிச்சட்டம் 80சியின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படும். மத்திய அரசே இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளதால் நாம் தைரியமாக முதலீடு செய்யலாம் என்பது பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களுக்கு சென்று தேவையான சான்றுகளை அளித்து மகிளா சம்மான் சேமிப்பு பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுபோல் வங்கிகளும் 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் தொகைகளுக்கு வட்டி வழங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மகிளா சம்மான் திட்டத்திற்கும் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை சற்று பார்க்கலாம்.
மகிளா சம்மான் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு நிலையாக 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி இரண்டு ஆண்டுகளுக்கு 6.75 சதவீதம் வட்டி மட்டுமே வழங்குகிறது தனியார் வங்கிகளை பொறுத்தவரை ஆக்ஸிஸ் வங்கி 7.26 சதவீதமும், எச்.டி.எப்.சி. ஐசிஐசிஐ வங்கிகள் தலா 7 சதவீதமும் வட்டி வழங்குகின்றன. மகிளா சம்மன் திட்டத்தை பொறுத்தவரை தனியார் வங்கிகளை விட அரை சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கூடுதலாக வட்டி கிடைக்கின்றது. அதே சமயம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஒருவேளை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி விதிகளின் படி முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச உத்தரவாத தொகையாக 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். ஆனால் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் இதுபோன்ற உத்தரவாதம் எதையும் மத்திய அரசு வழங்கவில்லை.