spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅஜித் அப்பாவி... சிக்கிய நிகிதா! வெளியான சிபிஐ ரிப்போர்ட்! நேரடி சாட்சியின் பேட்டி!

அஜித் அப்பாவி… சிக்கிய நிகிதா! வெளியான சிபிஐ ரிப்போர்ட்! நேரடி சாட்சியின் பேட்டி!

-

- Advertisement -

அஜித்குமார் மீது நிகிதா அளித்த திருட்டுப் புகார் பொய்யானது என்று சிபிஐ கூறியுள்ளதன் மூலம் அவர் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளதாக வழக்கறிஞர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியும், புகார்தாரருமான வழக்கறிஞர் கார்த்திக் ராஜா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அஜித்குமார் மரண வழக்கில் சிறையில் உள்ள 5 காவலர்கள் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் பதில் மனுவில், அஜித்குமார் மரண வழக்கில் 10 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும், அப்படி வழங்கினால் அவர்கள் சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட அஜித்குமார் தரப்பில் அவருடைய தாயார் மாலதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் மீது பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கின் நிலை குறித்து கேட்கப்பட்டது. அப்போது, சிபிஐ தரப்பில், நிகிதா கொடுத்த திருட்டு வழக்கு புகாரில் எந்த ஒரு நகை திருட்டு போனதற்கான முகாந்திரமும் இல்லை என்று பதில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் உண்மையை உலகம் அறிந்து கொண்டிருக்கிறது. ஒரு அப்பாவி இளைஞரை காவல் துறையினர் அடித்தே கொன்றிருப்பதாக நீதிபதி ஸ்ரீமதி பதிவு செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

சிபிஐ தரப்பில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தெரியவந்தால்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். டிஎஸ்பி சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் தலைமை காவலர் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் அஜித்குமாரை அடித்துக் கொன்றனர். சம்பவம் நடைபெற்ற பிறகு டிஎஸ்பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தரப்பில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் தெடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரையும் சிபிஐ கைது செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

அஜித்குமார் வழக்கில் 10 பேரை தாண்டி இன்னும் நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது. டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரி யார்? என்று விசாரித்து, சிபிஐ அவர்களின் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். நிகிதா மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக தான் புகார் உள்ளது. அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை ஆகும்.

இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி., டிஎஸ்பி, காவல் ஆய்வாளரின் ஒரு செல்போன் அழைப்பு விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவர்களின் தனிப்பட்ட செல்போன்களின் விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உள்ளோம். அஜித்குமார் மரணத்தின்போது அவருடைய உடல்களை வாங்க உள்ளுர் அரசியல்வாதிகள், அஜித்குமார் குடும்பத்தாரிடம் கட்டப்பஞ்சாயத்து பேசினார்கள். அது அங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது குறித்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியபோதும் அவர்கள் அது தொடர்பாக விசாரிக்கவில்லை. எனவே அது தொடர்பாக விசாரிக்க கோரி மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம்.

இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளது. அஜித்குமார் நகையை எடுத்தாரா? என்று குடும்பத்தினர் சந்தேகத்தில் இருந்தனர். சிபிஐ தரப்பில் அவர் மீது குற்றச்சாட்டு இல்லை என்று சொல்லியுள்ளதால் அஜித்குமாரின் தாயார் மாலதி நிம்மதி அடைந்துள்ளார்.

அஜித்குமாரின் சகோதரர் தற்போது மதுரையில் உள்ள ஆவினில் பணிபுரிந்து வருகிறார். அவரை சொந்த ஊருக்கு மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறோம். அதேநேரம் அஜித்தின் தயாரால் அந்த நிகழ்வில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அஜித் அனுபவித்த சித்ரவதைகளை அவரால் மறக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் மாலதி தினமும் அழுது வருகிறார். அவருக்கு மன ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிற கடுமையான தண்டனைதான் அவருடைய மனஉளைச்சலுக்கு மருந்தாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ