ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ், ஒய் பிளஸ் பாதுகாப்பு போன்றவை விஜயை பாஜக இயக்குவது போன்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அப்படி தான் இல்லை என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் விஜய் நிரூபிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயை பாஜக இயக்குவதாகவும், அவருக்கு பின்னால் அமித்ஷா – மோடி இருப்பதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக யாருடைய கட்சி? விஜய் அதற்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜயகாந்த் பெரிய அரசியல் அறிஞர் கிடையாது. ஆனால் மனதில் நினைத்ததை பேசுவார். அது சாமானியர்களுடன் உறவாடும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் அப்படி ஒரு விஷயம் விஜயிடம் இல்லை. இவருடைய சினிமா பேச்சு தொணிக்கும், மேடைப் பேச்சிற்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு 6 மாதம் கால் ஷீட் கொடுப்பது போல, தேர்தலுக்கும் 6 மாதம் கால் ஷீட் கொடுத்துள்ளளார். வாரம் ஒரு நாள் தான் அவர் ஷூட்டிங்கிற்கு வருகிறார். மற்ற நாட்களில் அவர் ஹோம் ஒர்க் செய்கிறார். விஜய் உடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அவருக்கு சுய சிந்தனை இருக்கிறதா? என்று கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் என்ன என்ன நதிகள் ஓடுகிறது? எந்த ஊரில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்பது போன்ற தரவுகளை தப்பு தப்பாக சொல்வதாக திமுக அம்பலப்படுத்துகிறது. அலையாத்திக் காடுகள், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் என எதுவும் தெரியாமல் போகிற போக்கில் பேசிவிட்டு சென்றுள்ளார்.

மத்திய பாஜக அரசை பெரிய எதிரியாக காட்டிக்கொள்வதன் வாயிலாக திமுக ஒரு ஜனநாயக சக்தியாக தங்களை காட்டிக் கொள்கிறது. அதேபோல், விஜய் திமுகவை எதிர்ப்பதன் வாயிலாக நாங்கள் தான் உண்மையான திராவிட இயக்கம், நான் தான் எம்ஜிஆர் என்று சொல்வதற்கு முயற்சி செய்கிறார். இந்த முயற்சி பலித்ததா? என்கிற கேள்வி இருக்கிறது. வருமான வரிசோதனைக்கு வந்த அருண்ராஜ், விஜய் கட்சியில் முதன்மை பொறுப்புக்கு வந்துள்ளார் என்றால்? இடையில் ஏதேனும் சமரசங்கள் நடந்ததா? என்கிற பல சந்தேகங்களுக்கு அது வழிவகுக்கிறது. அருண்ராஜ் ஒரு வலதுசாரி சிந்தனையாளராக உள்ளார். அப்போது பாஜகவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி, வலதுசாரி சிந்தனையாளரை கொண்டு விஜயை இயக்குவதாக சந்தேகம் எழுகிறது. அதிக தேர்தல் நிதி வழங்கிய மார்ட்டினின் மருகன் ஆதவ் அர்ஜுனா, தவெகவின் முக்கிய பொறுப்பில் உள்ளனர். அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் எல்லாம் சொல்லக்கூடிய விஷயம் என்ன என்றால்? விஜயை யாராலும் அணுக முடியாது. அவரை சுற்றி ஒரு வட்டம் இருக்கிறது என்கிறார்கள். அப்போது அந்த வட்டத்தை தாண்டி அருண்ராஜை யார் அனுப்பி வைத்தார்கள்? புஸ்ஸி ஆனந்தை தவிர்த்து மக்கள் தொடர்பு இல்லாதவர்களாக அந்த கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர். இந்த அமைப்பு மிகவும் ஆபத்தானது இல்லை.
திமுக தங்களை எதிர்த்த கமலை, பாஜக ஏவியதாக குற்றம்சாட்டியது. தற்போது அவர் இந்தியா கூட்டணிக்கு வந்துவிட்டதால் தற்போது அவர் மீது பாஜக முத்திரை இல்லையா? என விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் உண்மையில் பாஜக, கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் தர முக்கிய பிரமுகர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், காங்கிரஸ் பாரம்பரியத்தை சார்ந்த தான் ஒருபோதும் மதச்சார்புடன் செயல்பட மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதற்கு பிறகே இளையராஜாவுக்கு அந்த எம்.பி. பதவி வழங்கப்பட்டது. கமல்ஹசான் பாபர் மசூதி இடிப்பின்போதே பிரதமரிடம் எதிர் கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்க்கு எந்த விதமான அரசியல் சமூக பார்வை கிடையாது. விஜய் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகள் அவருக்கு போய்விடும் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் சீமானும் பிறப்பால் சிறுபான்மையினர் தான். ஆனால் அவரால் திரட்ட முடியவில்லை. சிறுபான்மை வாக்கு வங்கிதான் திமுகவின் அடித்தளம். அதை அடித்து நொறுக்கிவிட்டோம் என்றால் அதிகார மாளிகையில் இருந்து திமுக உதிர்ந்துவிடும் என்று பலரும் சொல்கிறார்கள்.
சபாநாயகர் அப்பாவுக்கு எங்கே சந்தேகம் ஏற்படுகிறது என்றால்? முதலமைச்சருக்கு விஜய் சவால் விடுகிறார் என்றால், அவருக்கான உத்வேகம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறார். ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் முதல் அவருக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு, தமிழிசையின் கருத்துக்கள் போன்றவற்றை பார்க்கும்போது பாஜக பின்னால் இருந்து இயக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இருவருக்கும் இடையே ஒரு மறைமுகமான ஒப்பந்தம் இருப்பதற்கு சாத்தியம் உள்ளது. சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் உலவி கொண்டிருக்கிறது. பாஜக ரூ.3000 கோடி கொடுத்து, விஜயை திமுகவை வீழ்த்துவதற்கு பிராஜக்ட் கொடுத்துள்ளனர் என்று சொல்கிறார்கள். அதனால்தான் அவர் சினிமாவை விட்டு வந்தார் என பேசுகிறார்கள். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருடைய நடவடிக்கைதான் அவர் அப்படிபட்டவர் அல்ல என்று நிரூபிக்க முடியும். அதுவரை அவர் மீது சந்தேகம் எழத்தான் செய்யும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.