திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திராவிட இயக்கம் என்பது, எங்கெல்லாம் திராவிடர் சித்தாந்தங்களுக்கு, கொள்கைகளுக்கு ஊரு ஏற்படுகிறோ, அங்கெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். அதிமுக என்கிற கட்சி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதுதான் மிகப்பெரிய தவறு. தமிழ்நாட்டு அரசியல். அந்த அரசியலில் நிலவுகிற சமரச போக்கை சிதைக்க கூடிய வகையிலான செய்கை. ஒரே ஒரு தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கினால் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி அனுமதி வழங்கினால், அது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானதாகும். சட்டப்படி அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம் மற்றும் கோயிலின் தலைமை பூசாரி மட்டுமே தீபம் ஏற்ற முடியும். தனிநபர்கள் எப்படி தீபம் ஏற்ற முடியும்?
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற ஒருதரப்புக்கு அனுமதி வழங்கினால், நாளை அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்க வேண்டி வரும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றச் சொல்பவர்கள், இந்து சமய அறநிலையத்துறை சட்டமே வேண்டாம் என்று சொல்கிறவர்கள். விஜய், இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பது, இந்துசமய அறநிலையத்துறை வேண்டாம் என்று சொல்கிற தரப்புக்கு ஆதரவாக உள்ளாரா? அதை திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆதரிக்கிறாரா? அப்போது இதில் அரசியல் இருக்கிறது. இந்த அரசியலால் பாதிக்கப்பட போவது தமிழ்நாட்டின் அமைதி தான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினருக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசியலில் பின்னடைவை தான் சந்திக்க நேரிடும்.

திருப்பரங்குன்றம் கோயிலில் அண்மையில் தீபம் ஏற்றுகிற அண்டா புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை விழா எடுத்து மலை மீது ஏற்றி வைத்தார்கள். அண்டாவை வழங்கியவர்கள் கூட அதை கொண்டுபோய் வைக்க முடியாது. திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுகிற உரிமை தலைமை அர்ச்சகர் அல்லது அவரது வம்சாவளியினருக்கு இருக்கும். அந்த உரிமையை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள். திருப்பரங்குன்றம் என்பது 4 குன்றுகளை உடையது. இந்த குன்றுகளை பாதுகாக்கும் பொறுப்பு பிரமலை கள்ளர்கள், மேலூர் கள்ளர்கள் என்று பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களின் உரிமையை விட்டுத்தர மாட்டார்கள்.
திருப்பரங்குன்றத்தில் சிலை கைங்கர்யம் செய்யும் உரிமை தேவேந்திர குல வேளாளர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களும் விட்டுத்தர மாட்டார்கள். அப்போது ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன நடந்துவிட போகிறது?. அதை அனுமதிக்கலாம். அரசாங்கம் இந்த விவகாரத்தில் மிகவும் ஈகோவாக நடந்து கொள்கிறது என்று சொல்வது, தவறான வாதமாகும். காரணம் இதற்கு பின்னால் இத்தனை உட்பிரிவுகள், இத்தனை சாதிகள் இருக்கினறன. அவர்களுக்கான பாரம்பரிய உரிமைகள் இருக்கின்றன. அதை நீங்கள் மறுக்கவே முடியாது.

அடுத்தபடியாக தேடலைட் கல். தேடலைட் என்பது டெலஸ்கோப் போன்ற ஒரு கவியாகும். அதை டிரை பேடில் பொருத்தி, இரு உயரமான பகுதிகளுக்கு இடையில் உள்ள கோணத்தை குறிக்க வேண்டும். இதை பிரிட்டிஷ்காரர்கள் நாடு முழுவதும் செய்திருக்கிறார்கள். இந்த செய்வதற்கு அவர்கள் தேர்வு செய்த பகுதி உயரமான பகுதிகள். அரிட்டாபட்டியிலும் இதை போன்ற தூணை பார்க்கலாம். திருப்பரங்குன்றத்தில் தூணை நிறுவி, அதில் தியோடலைட் கருவியை வைத்திருக்கிறார்கள். அது நன்றாகவே தெரிகிறது. மேலும், இது தொடர்பாக தொல்லியல் ஆய்வாளர்களும் பேட்டி கொடுக்கிறார்கள்.
தியோடலைட் கல் மீது கருவியை நிறுவுவதற்கான குழி இருக்கிறது. அதை பாஜக தரப்பில் அந்த குழிதான் தீபம் ஏற்றும் குழி என்கிறார்கள். இன்றைக்கு கூகுள் மேப், செயற்கைக் கோள்கள் வந்துவிட்ட நிலையில், இந்த தியோடலைட் கற்கள் பயனிழந்துவிட்டன. அதனால் சில கோயில்களில் அதை தீபத்தூணாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் கோயிலில் அப்படி ஏற்றவில்லை. திருப்பரங்குன்றத்தில் கீழே பால தீபமும், மலையின் மீது கார்த்திகை தீபமும் ஏற்றப்படுவது வழக்கம்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் தானாகவே தீபம் எரிந்துவிடுமா? தனி நீதிபதி தான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாக சொல்கிறார். அவர் எப்படி தொல்லியல் நிபுணராகவோ?, ஒரு தொல்லியல் ஆய்வாளராகவோ இருப்பார்? அவர் சட்டத்தை வகுக்கிற ஒரு நீதிபதி அவ்வளவுதான். எனவே தொல்லியில் துறையில் உள்ள விற்பனர்களை கலந்து, அவர்களிடம் அறிக்கை பெற்றுதான் தனி நீதிபதி தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அப்போது தீர்ப்பில் தவறு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. அதை எதிர்த்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்கிறது. இதில் விரிவான வாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாக திருக்கார்த்திகை முடிந்துவிட்டது. இனி அடுத்த வருடம்தான் தீஏற்றினாலும் பார்க்க முடியும். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு போய்விட்டது. இதுதான் தற்போதைய நிலைமை. பாஜக சார்பில் கதவடைப்பு நடத்த திருப்பரங்குன்றத்திலேயே மக்கள் ஆதரவு இல்லை.

அப்படி இருக்கும்போது ஏதோ ஒரு அமைப்பு வந்து நாங்கள் தீபம் ஏற்றுகிறோம் என்று கேட்டால், அவர்களை நீதிமன்றம் எப்படி அனுமதிக்கலாம்? நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக கோயில் நிர்வாகம் எப்படி அதை செய்ய முடியும்? உடனே செய்யாவிட்டால் நீதிமன்ற பாதுகாப்பிற்கு இருக்கும் மத்திய படைகளை அனுப்புவீர்களா? இவ்வளவு கேள்விகள் அதில் இருக்கிறது. இதில் பதில் அளிக்க வேண்டியது உச்சநீதிமன்றம் தான்.
இந்த விவகாரத்தில் தவெகவின் மௌனம். திமுகவின் கொதிப்பு ஆகியவை அரசியல். பாஜக உள்ளே வரும்போது அதுவும் அரசியல்தானே. பிரச்சினையை எழுப்பியவரே சங்க பரிவார அமைப்பில் கிடையாது. அவருடைய பல போராட்டங்களுக்கு பாஜக ஆதரவு வழங்கியதில்லை. இந்த விவகாரம் பிரச்சினை ஆன உடன் நயினார், அண்ணாமலை போன்றவர்கள் வருகிறார்கள். அப்படி என்றால் இதில் அரசியல் இல்லாமல் வேறு என்ன இருக்கிறது?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


