“திறமையால் சம்பாதிப்பது சுயநலமல்ல, வாழ்வாதாரம்” – சமுதாய சிந்தனையைத் தூண்டும் ஓர் ஆய்வுப் பார்வை.
ஒருவரிடம் அறிவோ, திறமையோ, பல ஆண்டு அனுபவமோ இருக்கலாம். ஆனால், அந்தத் திறமை அவருடைய வாழ்க்கையின் தேவையை நிறைவேற்றவோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்குப் பயனளிக்கவோ இல்லை என்றால், அது வெறும் அலங்காரப் பொருளாகவே மாறிவிடும். திறமைக்கு உண்மையான மதிப்பு கிடைப்பது அது வாழ்க்கையில் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படும்போதுதான்.

திறமையை விற்பது வாழ்வாதாரத்தின் வழி!
தன்னிடமுள்ள திறமையைப் பயன்படுத்தி ஒருவர் வருமானம் ஈட்டும்போது, அதை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. ஒரு மருத்துவர் தனது அறிவால் வருமானம் பெறுகிறார். ஓர் ஆசிரியர் தனது கற்பிக்கும் திறனால் பயனடைகிறார். ஒரு தொழிலாளி உழைப்பாலும், கலைஞர் தனது படைப்பாற்றலாலும், தொழில்முனைவோர் சிந்தனையாலும் வருமானம் தேடுகின்றனர். இவர்கள் யாருமே தங்களது திறமையை விற்பனை செய்யவில்லை; மாறாகத் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான வழியை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
விமர்சனங்களுக்குப் பின்னால் இருக்கும் பொறுப்புகள்
ஒருவர் தனது திறமையால் முன்னேற முயலும்போது, “அவருக்குப் பண ஆசை அதிகம்”, “சுயநலவாதி” என்று மிக எளிதாகக் குற்றம் சாட்டிவிடுகிறோம். ஆனால், அந்த நநபருக்குப் பின்னால் இருக்கும் குடும்பக் கஷ்டங்கள், பிள்ளைகளின் எதிர்காலம், கடன்கள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஒருவரின் முழு வாழ்க்கையையும் அறியாமல், அவரது முடிவை வைத்து மட்டும் தீர்ப்பளிப்பது நியாயமாகாது.
உயர்ந்த மனதின் அடையாளம்
- நம்மால் ஒருவருக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; அவர் முன்னேறுவதற்குக் முட்டுக் கட்டையாக இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய உதவியாகும்.
- பாராட்ட மனமில்லை என்றால் பரவாயில்லை, அவமதிக்க வேண்டாம்.
- வாய்ப்பு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, மற்றவரின் வாய்ப்பைப் பறிக்க வேண்டாம்.
- வெற்றியில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்ய வேண்டாம்.
- மனமிருந்தால் தட்டிக்கொடுக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் தீங்கு செய்யாமல் அமைதியாகக் கடந்து செல்வதே பக்குவம்.
சாராந்தோரின் வாழ்வு உயர்வதே உண்மையான வெற்றி!
“ஒருவர் தனது தனிப்பட்ட திறமையின் மூலம் எந்தளவிற்கு வருமானம் ஈட்டுகிறார் என்பதை விட, அத்திறமையின் மூலமாக அவரைச் சார்ந்திருக்கும் மனிதர்கள் எவ்வித நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பதே மிக முக்கியமானது; ஏனெனில், ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுவதும், ஒரு குழந்தையின் கல்வித் தேவைகள் தடைபடாமல் தொடர்வதும், வயதான பெற்றோருக்குத் தேவையான அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைப்பதுமே வாழ்க்கையின் உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது. நாம் அனைவருமே நமது அன்றாட வாழ்வில் மருத்துவர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளி எனப் சமூகத்திலுள்ள பிற மனிதர்களின் உழைப்பையும் திறமையையும் சார்ந்தே வாழ்ந்து வருவதால், மற்றவர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மரியாதையை அளித்து அவற்றை மதித்து வாழக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.”
“மற்றொருவரை வீழ்த்துவதிலோ அல்லது கீழே தள்ளுவதிலோ நமது உயர்வு அமைந்திருக்கவில்லை; மாறாக, ஒரு மனிதன் தன் உழைப்பால் உயர்ந்து வளரும்போது அதைக் கண்டு மனதாரப் பாராட்டி மகிழும் பரந்த மனப்பான்மையிலும் பெருந்தன்மையிலும்தான் நமது வாழ்க்கையின் உண்மையான பக்குவமும் உயர்வும் அடங்கியுள்ளது.”
பூனை உங்க காலைச் சுத்துதா? அய்யோ விரட்டாதீங்க… அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா!
