முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்கள் சமீபத்தில் அளித்த பிரத்யேகப் பேட்டி ஒன்றில், தனது திராவிட இயக்கப் பின்னணி, கலைஞர் கருணாநிதி உடனான நட்பு, மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


“தெருப்பொறுக்கிகள்” என்று ஏளனம் செய்தனர்
தனது ஆரம்பகால அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை நினைவு கூர்ந்த முன்னாள் நீதிபதி சந்துரு, “நாங்கள் துண்டு நோட்டீஸ் கொடுத்து, போஸ்டர் ஒட்டி மீட்டிங்கிற்கு ஆள் சேர்த்துப் பணியாற்றியபோது, பொதுமக்களில் பலரும் எங்களை ‘தெருப்பொறுக்கிகள்’ என்றே அழைத்தனர். ஆனால், அந்த ஏளனங்களையும் தாண்டி எங்களை மக்கள் ஆட்சிக்கு வர வைத்தனர். 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதல், தொடர்ந்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தங்களது ஆளுமையை நிலைநாட்டியுள்ளன. இப்போது அரசியலுக்குப் புதிதாக வந்திருக்கும் விஜய்க்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்; ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள்” என்று தெரிவித்தார்.
கலைஞரின் பண்பு: “தவறு செய்தால் குறை சொல்வார், நன்றாகச் செய்தால் பாராட்டுவார்”
கலைஞர் கருணாநிதி உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், “கலைஞரை அன்போடு ‘லவ்-ஹேட்’ (Love-Hate) உறவு என்று சொல்லலாம். நான் மாணவர் தலைவராக இருந்தபோது அவரை மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறேன். ஆனால், அவர் ஒரு முதிர்ச்சியடைந்த தலைவர். எனது ‘சுய வரலாறு’ புத்தகத்தை அவர் ஓய்வில் இருந்தபோது படித்துவிட்டு, அதை வரி வரியாகப் பாராட்டி ‘முரசொலி’யில் முதல் பக்கத்தில் கட்டுரையாக எழுதினார். அந்தப் பாராட்டு அவருக்குத் தேவையில்லை, ஆனால் ஒரு எழுத்தாளருக்குச் செய்ய வேண்டிய மரியாதையை அவர் செய்தார். நீதிபதி பணியில் இருந்தபோது, அரசையே எதிர்த்துப் பல தீர்ப்புகள் வழங்கியிருக்கிறேன். அப்போதும் அவர் அரசு நிர்வாகத்தில் குறுக்கிடவில்லை. இதுதான் கலைஞரின் மேன்மை” என்று புகழாரம் சூட்டினார்.
நீதித்துறையில் ஊழல்: அறுவை சிகிச்சை தேவையா?
நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் சவால்கள் குறித்த கேள்விக்கு, “நீதித்துறையில் ஊழல் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அது உண்மை. ஒரு நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த சம்பவமே இதற்குச் சாட்சி. ஆனால், இந்திய அரசியல் சாசனம் நீதிபதிகளுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அது சுதந்திரமாக நீதி வழங்க வேண்டும் என்பதற்காகவே தவிர, ஊழல் செய்வதற்காக அல்ல. ஒரு சாதாரண அரசு ஊழியரை எளிதில் பணிநீக்கம் செய்ய முடியும், ஆனால் நீதிபதிகளை நீக்குவது மிகவும் கடினம். இதுவே சில நேரங்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. நீதித்துறைக்கு ஒரு ‘டிரெஸிங்’ (Dressing) மட்டும் போதாது, முறையான அறுவை சிகிச்சை (Surgery) தேவை” என்று வெளிப்படையாகப் பேசினார்.
“அம்பேத்கரின் வழியே என் வழி”
தான் எந்தக் கட்சியையும் சாராதவர் என்பதை வலியுறுத்திய சந்துரு, “நான் எந்த அரசியல் நிர்பந்தமும் இன்றிச் செயல்படுபவன். இன்று எனக்கு விருப்பமான கருத்து என்றால் அது அம்பேத்கருடையதுதான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மேடைகளில் அம்பேத்கரின் கொள்கைகளைப் பேசியிருக்கிறேன். ஒரு நீதிபதி என்பவர் எல்லாருக்கும் பிடித்தவராக இருக்க முடியாது, ஆனால் நேர்மையானவராக இருக்க முடியும். அதுவே எனது கொள்கை” என்று தனது நேர்காணலை நிறைவு செய்தார்.
