spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉற்சாகம் தந்த டெல்லி செய்தி! மருத்துவமனையிலும் மக்கள் பணி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

உற்சாகம் தந்த டெல்லி செய்தி! மருத்துவமனையிலும் மக்கள் பணி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

வழியனுப்பு விழா கூட நடத்தாமல் ஜகதீப் தன்கரை, குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அனுப்புவதன் வாயிலாக மத்திய அரசுக்கும், அவருக்கும் மனக்கசப்புகள் இருந்தன என்பது தெளிவாகிறது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  குடியரசுத் துணை தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர், ராஜினாமா செய்ததற்கு, நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. யஷ்வந்த் வர்மா மீதான தகுதி நீக்க விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், எந்த அவை முதலில் எடுக்கிறதோ, அவர்கள் தான் முதலில் விவாதிப்பார்கள். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானத்தை ஜகதீப் தன்கர் எடுத்துக்கொண்டார். அப்போது இதற்கான பெயர் எதிர்க்கட்சிகளுக்கு தான் செல்லும். பாஜக மக்களவையில் இதுதொடர்பாக தீர்மானம் கொடுக்கலாம் என்று இருந்த நிலையில், தன்கர் அதனை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார். தங்களை கலந்தாலோசிக்காமல் ஏற்றுக்கொண்டார் என்று கூட பிரச்சினை இருக்கலாம். ஆனால் திடீரென அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க மாட்டார். அவர் மேற்குவங்க அரசாங்கத்திற்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியவர். அப்படி தொல்லை கொடுத்ததன் காரணமாகவே குடியரசுத் துணைத் தலைவர் ஆக்கப்பட்டவர் தன்கர். இதனால் தான் கேரளா, தமிழக ஆளுநரும் தங்களுக்கும் இதுபோன்று பரிசளிப்பார்கள் என்று எதிர்க்கின்றனர்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுடன் எடப்படி ஜெகதீப் தன்கர் கலந்து ஆலோசிக்கவில்லையோ, அதேபோல் பாஜக தலைமையிடமும் அனைத்து விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்காமல் இருந்துள்ளார். மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் போன்றவர்களுக்கு வானளாவிய அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் பாஜக தன்கருக்கு என்ன அதிகாரம் இருந்தாலும், அவரை பதவிக்கு கொண்டுவந்த தங்களிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். மேற்குவங்க ஆளுநராக பொறுப்பு வகித்தபோது தன்கர் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார். மாநிலங்களவை தலைவராக இருந்தபோது காங்கிரசிடம் கடுமையாக நடந்துகொண்டார். அதேபோல் பாஜகவினரிடம் கடுமை காட்டினார். அத்துடன் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். இவைதான் அவர் பதவியில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருந்திருக்கும். தொடர்ந்து அவர் மீது அதிருப்தி வந்துகொண்டே இருந்தன. இதன் தொடர்ச்சியாக பதவி விலக நேரிட்டுள்ளது. மாநிலங்களவை தலைவராக இருந்த தன்கருக்கு, ஒரு வழியனுப்பு விழா கூட நடத்த முடியாத வகையில் பிரதமர் அனுப்பியுள்ளார். அப்போது மத்திய அரசுக்கும், அவருக்கும் நிறைய மனக்கசப்புகள் உள்ளன என்பதில் சந்தேகமே கிடையாது.

பீகார் அரசியலில் நிதிஷ்குமாரை வெளியேற்றும் வகையில், அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. வெங்கய்யா நாயுடுவை குடியரசுத் துணை தலைவர் ஆக்கினார்கள். ஆனால் அவரை குடியரசுத் தலைவர் ஆக்காமலேயே வெளியே அனுப்பினார்கள். இதேபோல், நிதிஷ்குமாருக்கும் குடியரசுத் தலைவர் பதவி வழங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. ஒரு காலத்தில் அப்படி ஒரு நிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. பீகாரில் பாஜக ஒரு வலிமையான கட்சியாக உருவெடுக்க வேண்டும். நிதிஷ்குமார் கட்சி வலுவிழக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாகும். இதேபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஒதுக்க வேண்டும் என்றாலும் அப்படிதான். மோடி வருவதற்கு முன்பாக இருந்த அனைத்து தலைவர்களும் காலியாகிவிட்டனர். ராஜ்நாத் சிங், ஒருவர் மட்டும்தான் தற்போது எஞ்சி இருக்கிறார். அதற்கு காரணமாக 2014 தேர்தலில் மோடியை பிரதமராக வர  வேண்டும் என்று சொன்னவர் ராஜ்நாத் சிங். அந்த விசுவாசத்திற்காக தான் அவருக்கு பொறுப்பு கொடுத்தார்கள். தற்போது ராஜ்நாத்தையும் அனுப்பிவிட்டால், மோடிக்கு பிரச்சினை இருக்காது. இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணை தலைவராக போடலாம். எதிர்வரும் தேர்தலில் கொங்கு வேளாளர் வாக்குகளை பெறுவதற்காக செய்யலாம்.

சீமானுக்கு, தன்னுடைய வாக்குகள் விஜயிடம் போய்விடும் என்கிற அச்சம் உள்ளது. மு.க.முத்துவின் மறைவுக்கு, அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது என்பது ஒரு சிறிய காரணம்.  அதற்கு மேலே பெரிய காரணம் முதலமைச்சரை சந்தித்து பேசியது. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நமக்கு தெரியாது. இன்றைய தேதிக்கு அதிமுக உடன் , நாம் தமிழர் கட்சி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க எடப்பாடி பழனிசாமியின் மீது பாஜக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதை மக்களிடம் சொல்லி எடப்பாடியால் ஆதரவு திரட்ட முடியும். அதனால் எடப்பாடி பிரதமர் மோடியை சந்திக்கும்போது கூட்டணி ஆட்சி விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை உறுதிபடுத்த வலியுறுத்துவார். அவரும் அதை நிச்சயமாக சரி செய்வதாக சொல்வார். ஆனால் செய்ய மாட்டார்.

தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இது ஏதோ ஒன்று, இரண்டு  நாட்களில் நடந்த மாயாஜாலம் கிடையாது. 100 ஆண்டுகளாக இங்கே ஒருங்கிணைந்த வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவர்களே ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பது தமிழுக்கு கிடைத்த நல்வாய்ப்பு ஆகும். ஆனால் 95 வருடத்தில் நடந்ததைவிட இந்த 5 வருடத்தில் மிகமிக வேகமாக நடைபெற்றுள்ளது. அரசின் நிர்வாகத்தில் நான் பணிபுரிந்துள்ளேன். கடந்த 4.5 ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த முயற்சிகள் மிகமிக பாராட்டுக்குரியது. காலை உணவுத்திட்டம், இலவச பேருந்து பயணம் போன்ற வளர்ச்சி திட்டங்களால் என்ன என்ன பலன் நிகழ்ந்தது என்பது நாளைய தேர்தலுக்கான முயற்சிகள் அல்ல. நாளைய தலைமுறைகளுக்கான முயற்சியாகும். உறவினர்கள், நண்பர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு உயிரிழந்தால் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். அவர்கள் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இன்றைக்கு ஸ்டாலின் நடத்துவது மிகப்பெரிய பரிசோதனை. எல்லா ஊர்களிலும் இருக்கக்கூடிய லஞ்ச ஊழல், தமிழ்நாட்டிலும் இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் பெரும்பான்மை குழுக்களுக்கு போட்டிருக்கும் திட்டங்கள் எல்லாம், லஞ்ச – லாவணயத்திற்கு உட்படாத வகையில் பணம் பயனாளிகளுக்கு நேரடியாக போய் சேரும் வகையில் செய்திருக்கிறார். முன்பு பட்டாக்களை கொடுக்க பணம் கேட்கும் நிலையில், தற்போது 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்து விட்டார்.  அப்போது லஞ்சம் வாங்குபவர்களுக்கு அது சாத்தியமில்லை. இது ஒரு பெரிய காரியம். நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு அது தெரியும். முதலமைச்சர் சொல்வது போல, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்தார்கள் என்றால் பல மக்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி பெரிய கட்சி கூட்டணிக்கு வரும் என்கிறார். எனக்கு தெரிந்து கடந்த முறை மன்சூர்அலிகானை தவிர வேறு யாரும் வரவில்லை. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ