பாமகவில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது ராமதாசின் பேச்சை கேட்டு, அன்புமணி அரசியலில் இருந்து விலகுவதுதான் என்று அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் – அன்புமணி மோதலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து சி.என்.ராமமூர்த்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக உடன் கூட்டணி வைக்காவிட்டால் ராமதாஸ் தனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்று அன்புமணி மிரட்டல் விடுத்தாக சொல்கிறார். சௌமியா அன்புமணி தான் பாஜக உடன் கூட்டணி பேசி முடித்தது. அதனால் நீங்கள் வந்து ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறபோது, ராமதாசும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். தேசிய நலன் கருதி கூட்டணி என்றார். சௌமியா தான் சூத்திரதாரியாக இருந்துகொண்டு அன்புமணியை ஆட்டிப்படைக்கிறார்.அதனால் அவர் சொல்வதை கேட்டாக வேண்டிய நிலை ராமதாசுக்கு இருக்கிறது. தற்போது மருத்துவர் ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக பேசியதால், அவர் வெளியே வாரதபடி அன்புமணி 10 பவுன்சர்களை போட்டுவிடுவார். இதுபோன்று அவர் எவ்வளவு பேருக்கு செய்தார். அதுதான் திருப்பி நடக்கிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியை அடித்தார்கள். ராமதாசுக்கு பக்கத்து ஊரில் வைத்துதான் அடித்தார்கள். அதற்காக 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
வன்னியர் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் வன்னி அடிகளார். அவரை காதை அறுத்தார்கள். அதற்கு பிறகு ஏ.கே.நடராஜனை முடமாக்கினார்கள். அதற்கு பிறகு சி.வி.சண்முகத்தை அடித்தார்கள். அவரது உறவினர்கள் முருகானந்தம் என்பவரை வெட்டிக்கொன்றார்கள். என்னையும் 20க்கும் மேற்பட்ட முறை தாக்கினார்கள். எனது காலை உடைத்தனர். உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டும். 8 நாட்களில் தலைவரை மாற்ற வேண்டும் சௌமியா காலக்கெடு விதித்தார் என்று சொல்கிறார். மகாபலிபுரம் ஓட்டலில் ராமதாஸ் தங்கியிருந்தபோது தான் சவுமியா சென்று பேசினார். ராஜேஸ்வரி பிரியா காலையில் வருகிறார். மதியம் மாநில இளைஞரணி தலைவராகிறார். அதன்பிறகு பொங்கலூர் மணிகண்டன். காலை பாமகவுக்கு வருகிறார். மதியம் அவர் துணை தலைவராக நியமிக்கிறார். கட்சியில் நீக்கும்போது எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் நீக்குகிறார்கள். அன்புமணிக்கு தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தார். அதுதான் கொடுத்துவிட்டார்.
தனது இறுதிக்காலம் வரை நான் தான் பாமகவின் நிறுவனர், நான் தான் தலைவர் என்கிற முடிவை மருத்துவர் ராமதாஸ் எடுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்பாக யார் இருந்தாலும் விட மாட்டேன். அது மகனாக இருந்தாலும் பார்க்க மாட்டார். முகுந்தன், இவர்களின் சண்டையை பார்த்து பதவியை விட்டு விலகிச்சென்றுவிட்டார். அன்புமணி – சவுமியாவுக்கு என்ன என்றால் பாஜகவுடன் எப்படியாவது கூட்டணிக்கு போய் வழக்கை முடித்துவிட வேண்டும். அன்புமணி மீது வழக்கு இருந்தாலும் என்றைக்காவது ஒருநாள் விசாரணைக்கு எடுக்கத்தான் போகிறார்கள். அப்போது, அவர் சிறைக்கு சென்றுதான் ஆக வேண்டும். தற்போது 3 ஆண்டுகள் முடிய போகிறது. பாமக பொதுக்குழுவை கூட்டி யாரையாவது ஒருவரை ராமதாஸ் தலைவராக அறிவிப்பார். ஜி.கே.மணியை கூட தலைவராக அறிவிப்பார். அன்புமணியால் என்ன செய்ய முடியும்?
வன்னியர் சமுதாயத்தினர் ஓராண்டுக்கு ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் எரிவதால்தான் அவர்கள் கொதிக்கிறார்கள். எரிவது அடங்கினால், அவர்கள் கொதிப்பதும் அடங்கிவிடும். வன்னியர்களின் நன்மைக்காக தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள். 240 அறக்கட்டளைகள், ராமதாஸ் எல்லா பணத்தையும் வாங்கி வன்னியர் கல்வி அறக்கட்டளையை தனது பெயரில் எழுதிக்கொண்டார். அதை மீட்டு எடுக்க முயற்சிக்க வேண்டும். மற்றொன்று நலவாரிய வழக்கு நிலுவையில் உள்ளது. இளைஞர்கள் தெளிவாக வேண்டும். அன்புமணி கூட்டிய கூட்டத்திற்கு அதிகளவிலான நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ராமதாஸ் கூட்டினால் இதைவிட பெரிய கூட்டம் வரும்.
அன்புமணிக்கு கூடியவர்களில் 25 பேரை நீக்கிவிட்டுதான் புதிய மாவட்ட செயலாளர்களை போட போகிறார். பாமகவில் 30 அணிகள் உள்ளன. அந்த அமைப்புகளை அன்புமணியால் போட முடியும். ராமதாஸ் கொஞ்ச நாளில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார். அப்போது யார் அன்புமணியிடம் செல்வார்கள்? அன்புமணியை சொல்லிவிட்டு ராமதாசே சென்று பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டாரா? அன்புமணிக்காவது வழக்கு உள்ளது. ஆனால் மருத்துவர் ராமதாஸ் சென்றால் அந்த பிரச்சினை கிடையாது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அன்புமணியால் தான் முடியும். அன்புமணி தான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ராமதாஸ் அவரை ஒதுக்கிதான் வைப்பார். அன்புமணியிடம் பணம் இருக்கலாம். அதைவைத்து ஆட்களை கூட்டி வரலாம். ஆனால் இதை எப்படி தவிடுபொடியாக்க வேண்டும் என்கிற வித்தை தைலாபுரத்தில் இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.