ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


கரூரில் கடந்த சனிக் கிழமையன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விதிகளை வகுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை அறிந்தும் கரூரில் இருந்து விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பிரச்சாரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் பல மணி நேரம் தாமதமாக வந்தது, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தவெக நிர்வாகிகள் சரிவர மேற்கொள்ளாதது என விஜய் மீதும், தவெகவினர் மீதும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பதிந்துள்ள வழக்கும், விசாரணை ஆணையமும் தங்களுக்கு நெருக்கடியாக மாறும் என்று சந்தேதிக்கிறது தவெக தரப்பு. திமுக- தவெக இடையே அரசியல் மோதலை கரூர் கூட்டநெரிசல் சம்பவம் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கி உள்ளது. கரூரில் கூட்டநெரிசல் மரணங்கள் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே உள்துறை அமைச்சகம் மூலமாக முதல்வரிடம் விளக்கம் கேட்டார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்பே இது நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விவரங்களை கேட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான சி.டி. நிர்மல் குமார் கோரிக்கை விடுத்தார்.
இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் முகமாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஆலோசனைக்கு அணுகுமாறு விஜய் தரப்புக்கு சொல்லப்பட்டதாக தெரிகிறது. குருமூர்த்தியை விஜய் சந்திக்குமாறு சொல்லப்பட்டது. ஆனால் விஜய், அதற்கு தயங்கிய நிலையில் தவெக தரப்பில் சிலரை சந்திக்க அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. குருமூர்த்தியினுடைய இல்லத்தில் அவரை விஜய்க்கு நெருக்கமான தவெகவினர் சிலர் சந்தித்து பேசியுள்ளனர்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்கம் முதலாகவே தவெகவை கூட்டணியில் இணைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால் விஜய், திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார். பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் வரையறுத்தார்.
தற்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விஜயின் அரசியலுக்கு கடும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விஜய்க்கான நெருக்கடி சூழலை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் டெல்லியில் ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அறிந்துகொண்டுதான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு பேசிய கையோடு, தவெக தலைவர் விஜயோடும் பேசி இருக்கிறார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


