மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக ஆண்டிற்கு ரூ.23 ஆயிரம் கோடியை கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக வெறும் ரூ.2 ஆயிரத்து 976 கோடியை கொடுப்பது நியாயமா? என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோவை, சென்னை மாவட்டங்கள் சம்பாதித்து, அரியலூர் உள்ளிட்ட பிற மாவட்டத்தினர் சாப்பிடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் கோவைக்காரர்களும், மெட்ராஸ்காரர்களும் தான் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அரியலூர், தருமபுரி உள்ளிட்ட மற்ற ஊர்க்கார்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள் என்று தமிழ்நாட்டிற்கு உள்ளேயே ஊர் பிரச்சினையை தூண்டிவிடும் விதமாக பேசியிருக்கிறார். ஒருநாட்டின் மத்திய அமைச்சர் பேசுகிற பேச்சா இது? ஒரு சாதி சங்கத்தின் தலைவர் கூட இப்படி எல்லாம் மோசமாக பேச மாட்டார்கள். இது அப்பட்டமான பிரிவினைவாத பேச்சாகும். முதலில் தமிழர்களை அந்நியப்படுத்தினீர்கள். இப்போது தமிழ்நாட்டிற்குள்ளேயே எங்களையே சண்டைபோட வைக்கிறீர்கள்.
மற்ற மாநிலங்களிலாவது வேறு வேறு மொழி பேசுபவர்கள் கலந்து பல்வேறு கலாச்சாரத்துடன் இருப்பார்கள். கர்நாடகாவில் மராத்தி மக்கள் உள்ள பகுதி, கன்னட மக்கள் உள்ள பகுதி மற்றும் தமிழர்கள், மலையாளிகள் நிறைந்த பகுதிகள் என்று வேறுபாடு உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் இருக்கும் பகுதி வேறு, பாஜக இருக்கும் பகுதிகள் வேறு. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அரசியல், மொழி, பண்பாடு எல்லாம் ஒன்று. தமிழ்நாட்டிற்காரர்கள் தீர்மானித்தார்கள் என்றால் திமுகவுக்குதான் ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். ஒரு சில இடகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அது பெரிய அளவில் கிடையாது.
நிர்மலா சீதாராமன் என்ன சொல்கிறார் என்றால், கோவைகாரர்கள் சம்பாதிக்கிறார்களாம். கோவையின் பொருளீட்டலில், மதுரைக்காரர்கள், தேனி, திருப்பூர்கார்களின் பங்களிப்பு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சென்னையின் அபரிமித வளர்ச்சியில் விழுப்புரம், அரியலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டக்காரர்களின் உழைப்பு இல்லையா? சென்னையின் வளர்ச்சியில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த உழைக்கும் தோழர்கள், அறிவுசார் நிபுணர்கள், ஐ.டி செக்டார் என்று எல்லாவற்றிலும் வாழவைப்பவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். தருமபுரி, வேலூரை சேர்ந்தவர்கள் பெங்களுருவுக்கு செல்வார்கள். பெங்களுருவின் தனிப்பட்ட நகரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு உண்டு. அப்படி இருக்கையில் கோவையையும், சென்னையையும் உருவாக்கியதில தமிழர்களுக்கு பங்கு இருக்காதா?
கோவை தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு சம்பாதித்து கொடுப்பதாக பொய்யை, வெறுப்பு அரசியலை நிர்மலா சீதாராமன் தூண்டி விட்டிருக்கிறார். எப்படி இந்து – முஸ்லிம், பள்ளிவாசல் என்று பேசுவீர்களோ அதுபோல கோவைக்காரன், அரியலூர்காரன் என்று பேசி இருக்கிறார். கோவையில் இருப்பதில் 20-30 விழுக்காடு பேர், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். மெட்ராசில் இருப்பதில் 40 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாவட்டத்தவர்கள்தான். இது எல்லோருக்கும் தெரியும். ஒரே மொழி பேசும் மாநிலத்திற்குள் இந்த ஊருக்காரன் சம்பாதித்து, அந்த ஊருக்காரன் சாப்பிடுகிறான் என்று தூண்டிவிடும் நீங்கள், உத்தர பிரதேச மாநிலத்திற்கு நம்மாளுதான பணம் கொடுத்தால் என்ன? என்று கேட்கிறீர்கள். பணம் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் திருப்பி வருவதில் எவ்வளவு பெரிய பாரபட்சம் இருக்கிறது என்பதை நீங்கள் நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.18,880 ஆகும். அதில் மத்திய அரசின் வரிப் பகிர்வு ரூ.13,089 கோடி. பீகார் மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.4,731 கோடி, அதில் மத்திய அரசின் வரிப் பகிர்வு ரூ.7,338 கோடி. மத்திய பிரதேச மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் என்பது ரூ.7,384 கோடியாகும், அதில் மத்திய அரசின் வரிப் பகிர்வு ரூ. 5,727 கோடி ஆகும். அதே வேளையில் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி வருவாயாக ரூ.23,661 கோடி மத்திய அரசுக்கு அளிக்கிறது. அதில் மத்திய அரசின் வரிப் பகிர்வாக வெறும் ரூ.2,976 கோடி மட்டுமே தமிழ்நாட்டிற்கு திரும்ப வருகிறது. இது எவ்வளவு பெரிய அநீதியாகும். இதை தான் நாம் கேட்கிறோம். இதைதான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேட்கிறார். முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் ஆதாரத்துடன் கேட்டார்.
அதெப்படி உ.பி.க்கு, பீகாருக்கு மட்டும் அள்ளித்தருகிறீர்கள். உண்மையிலேயே உழைத்து வரி அதிகம் கொடுக்கும் ஆண்டிப்பட்டிக்காரன், மணச்சநல்லூர்காரனுக்கும், கும்மிடிபூண்டிகாரனுக்கும் பட்டை நாமத்தை போடுகிறீர்கள். இதைதான் தமிழ்நாடு அரசு கேட்கிறது. தமிழர்கள் கேட்கிறார்கள். பொருளாதார நிபுணர்கள் கேட்கிறார்கள். இதுதான் தாய் உள்ளமா? இதை கேட்டால் தமிழர்களுக்குள்ளேயே பிரச்சினையை தூண்டிவிடுவது எந்த விதத்தில் அறமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.