spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுக + தேமுதிக உறுதி! ஓபிஎஸ் கணக்கு என்ன? உமாபதி நேர்காணல்!

திமுக + தேமுதிக உறுதி! ஓபிஎஸ் கணக்கு என்ன? உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணிக்கு தேமுதிக வர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதேவேளையில் ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் உமபாதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக, அதிமுக கூட்டணியில் இணைகிற புதிய கட்சிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளதாக கூறியுள்ளார். தேமுதிக உடன் தான் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே கனிமொழி அவர்களை தான் குறிப்பிட்டு பேசியுள்ளார். தேமுதிக தரப்பில் இரட்டை இலக்கத்தில் இடங்கள் கேட்பதாக கூறப்படுகிறது. எனினும் திமுக தலைமை குறைவான இடங்களையே வழங்கும்.

பிரேமலதா விஜயகாந்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் முன்பு இருந்தே உள்ளது. எனவே ராஜ்யசபா இடம் கொடுத்தால் பிரேமலதா உறுதியாக செல்வார். திமுக கூட்டணி உறுதியாக இருந்தபோதும், கூடுதலாக கட்சிகளை சேர்க்க விரும்புகிறார்கள். தேமுதிகவுக்கு குறைவான வாக்குகள் இருந்தாலும், அது தங்களுக்கு உதவும் என்று திமுக தலைமை நினைக்கிறது. எடப்பாடி பழனிசாமி ராஜ்யசபா இடம் தருவதாக கூறி வழங்காததால் தான் பிரேமலதா கூட்டணியை விட்டு வெளியேறினார். தற்போது ராஜ்ய சபா இடம் தருவதாக உறுதி அளித்தால் அவர் அதிமுக – என்டிஏ கூட்டணிக்கு சென்றுவிடுவார்.

பிரேமலதா விஜயகாந்த்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணிக்கு செல்வார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவரை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்படுகிறார். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டு திமுகவுக்கு போக வேண்டுமா? என்கிற எண்ணம் அவரை தடுக்கிறது. அதேபோல் தான் குன்னம் ராஜேந்திரன் திமுகவுக்கு செல்கிற முடிவை கைவிட்டு அரசியலில் இருந்து விலகினார். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற 8 பேர் அமைச்சராக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் எதார்த்த அரசியலை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஓபிஎஸ் ஒரு சென்டிமெண்ட் அடிமை ஆவார். கடைசியில் அவருடைய வாழ்க்கை அப்படியே முடிந்துவிடும். ஆனால் எடப்பாடி பழனிசாமி நன்றாக செட்டில் ஆகிவிட்டார். எடப்பாடி சம்மதம் தெரிவித்தால் அதிமுகவுக்கு வரத் தயாராக உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டார். தனிக்கட்சி தொடங்கியோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடலாம். அல்லது தர்மயுத்தம் 3.0-வை தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

eps ops

இந்தியா டுடே – சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 45 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 33 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 12 சதவீதமாக உள்ளது. கருத்துக்கணிப்புகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தபோதும் சூழ்நிலை அப்படியாக தான் உள்ளது. முதல் கட்சிக்கும் 2-வது இடத்தில் உள்ள கட்சிக்குமான இடைவெளி பெரிதாகவே உள்ளது. தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 22 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை விஜய்க்கு 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அவர் அதிமுக வாக்கு வங்கியை தான் உடைக்கிறார். காரணம் அதிமுகவில் தான் தனிமனித வழிபாடு முறை உள்ளது. திமுகவினர் கொள்கை பிடிப்போடு உள்ளவர்கள். எனவே அதிமுக வாக்குகள் தான் விஜய்க்கு செல்லும்.

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இறுதியாக வீசுகிற அலையை பொறுத்து தான் எந்த கட்சி எவ்வளவு இடங்களை பிடிக்கும் என்று கணக்க முடியும். திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் பெரிய அளவில் இல்லை. மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறபோது தான் அரசுக்கு எதிரான மனநிலை ஏற்படும். தமிழ்நாடு செழிப்பாக உள்ளதால் மக்களிடம் அத்தகைய எண்ணம் ஏற்படவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ