Homeசெய்திகள்கட்டுரைகடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா! 

கடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா! 

-

- Advertisement -

சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்ததாகவும், அப்படி கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி தெரிவித்துள்ளார்.

கோவையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காந்தி ஒரு அகிம்சை என்கிற தத்துவத்திற்கு பின்னால் நின்றார். உலகம் அதை ஏற்றுக்கொண்டது. அந்த தத்துவத்தின் நிறுவனராக அவர் திகழ்ந்தார். பெரியார் ஒரு நிறுவனத்தின் தலைவர். நேரு ஒரு சித்தாந்தத்தின் தலைவர். அன்றைக்கு இருந்த சோசியலிஸ்ட் செக்யூலர் என்ற அமைப்பிற்கு, தத்துவத்ததிற்கு அவர் ஒரு தலைவர். சில சிந்தனையாளர்கள் மட்டும்தான் தங்களை தனிமனிதன் என்கிற இருப்பில் இருந்து ஒரு நிறுவனமாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். அப்படி பெரியார் இருந்தார். அண்ணா இருந்தார். அம்பேத்கர் இருந்தார். நேரு இருந்தார். காந்தி இருந்தார். கலைஞர் இருந்தார். இன்றைக்கு தமிழ்நாட்டு அளவில் சிந்தனை மரபில் பேராசிரியர் சுப.வீ தனி ஒரு நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் எந்த எந்த இயத்திற்கு எல்லாம் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை ஒரு குறியீடாக இந்த விழாவில் பேராசிரியர் சுப.வீ காட்டியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் இல்லை என்றால் சிபிஎம் கூட இருந்திருக்காது அல்லது வெற்றி பெற முடியாது. மதிமுக, இஸ்லாமிய இயக்கங்கள் இருந்திருக்க  முடியாது. ஏன் காங்கிரசே சுய மரியாதை இயக்கங்கள் இல்லாமல் இன்றைக்கு இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுவாசப்பை இந்த சுயமரியாதை இயக்கமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரியார், தனக்கு இப்போதெல்லாம் சலிப்பு வந்துவிட்டது என்று விடுதலையில் எழுதுகிறார். அதை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அண்ணா அதை படித்துவிட்டு அங்கிருந்து கடிதம் எழுதினார். ஐயா அவர்களே உங்களுக்கு ஏன் சலிப்பு வர வேண்டும். உலகில் உள்ள அனைத்து  புரட்சிகளையும் நான் பார்த்திருக்கிறேன். பிராதன புரட்சி என்றால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி. இந்த புரட்சிகளை எப்படி வென்று எடுத்தார்கள். அவர்கள் கருத்தியல் என்ன? அந்த கருத்தியலை கொண்டு சென்ற தலைவர்கள் எத்தனை பேர்? எத்தனை நூற்றாண்டுகள்? பிரெஞ்சு புரட்சிக்கு 2 நூற்றாண்டுகள், ருசோ, வால்டேர் என்று தலைவர்கள் தேவைப்பட்டது. ரஷ்ய புரட்சியை முன்னெடுத்த தலைவர்கள் மார்க்ஸ், லெனின் என்று 2 தலைவர்கள். எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் 2 நூற்றாண்டுகள். அண்ணா சொல்கிறார், தந்தை அவர்களே எனக்கு தெரிந்து உலகத்தில் எத்தனையோ புரட்சிகளை பார்த்திருக்கிறேன். குறைந்தபட்சம் 2 தலைவர்கள். 2 நூற்றாண்டுகள். ஆனால் ஒரே ஒரு தலைவன் மட்டும், தன் வாழ்நாளில் ஒரு தத்துவத்தை சொல்லி, தான் வாழுகிறபோதே அந்த தத்துவத்திற்கு அரியணை கிடைத்த வரலாறு என்றால் அது உங்களுக்கு தான் உண்டு. உங்களுக்கு ஏன் சலிப்பு வர வேண்டும். நாங்கள் இருக்கிறபோது என்று அண்ணா சொன்னார். பெரியாரை சலிப்பு வராமல் பார்த்துக்கொள்கிற கடமையை அன்றைக்கு அண்ணா செய்துகொண்டிருந்தார். இன்றைக்கு திராவிட இயக்கங்களுக்கு எல்லாம் சலிப்பு வராமல் பார்த்துக்கொள்கிற பெரிய வேலையை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான மனிதர் இன்றைக்கு செய்துகொண்டிருக்கிறார்.

ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

இங்கே பேசுகிறபோது சொன்னார்கள். சுயமரியாதை இயக்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. என்ன செய்தது என்று கேட்கிறார்கள்… அவர்களுக்கு சொல்கிறேன். பேராசிரியர் சொல்வார்… அப்போதே ஒரு மா.பொ.சி கிடைத்தார். இப்போது ஒரு மணியரசன் கிடைத்துள்ளார். பெயர்களில் தான் வித்தியாசம். அந்த மணியரசனின் கீழ் தொண்டர் அடிபொடியாளர்கள் எல்லாம் வருவார்கள். ஒரு தத்துவ ஓட்டத்தில் இவை எல்லாம் வழியில் வருகிற இடர்கள். இவற்றை எல்லாம் வென்றெடுக்க வேண்டும். பாரதிதாசன் சொல்கிறார். தமிழா இங்கு உன் நாட்டிற்கு இழி கழுதை ஆட்சியா என கேட்டார்?.. தாமரை மலரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் நான் சொல்ல வேண்டும். இவை எல்லாவற்றுக்காகத் தான் திராவிட மாடல் நாயகர் சொன்னார் பாரதிதாசனை கொண்டாடுவோம். இன்றைக்கு தேவை பாரதிதாசன்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

என்ன பிரச்சினை… எங்களை எல்லாம் டெல்லியில் வினோதமாக பார்க்கிறார்கள். எங்களை யாரும் குறைத்து பார்க்கவில்லை. இவனுங்க மட்டும் எப்படி இப்படி இருக்கானுங்க என்று எங்கள பார்க்கிறார்கள். இதற்கு காரணம் மிகவும் சுலபமானது. சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டுகளை முடித்துவிட்டது. அதனால் நாங்கள் இப்படி இருக்கிறோம். நாங்கள் போடுகிற தீர்மானமும், நீங்கள் கொண்டுவருகிற சட்டமும் வெவ்வேறாக இருக்கிறது நீட்-ல், வக்பில்… என்ன காரணம்? எங்களுக்கு பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு. அந்த உணர்வு இருக்கிற காரணத்தால் நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்க்கிறோம். சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்தோம். கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என்ன காரணம் ஒரு நூற்றாண்டு வரலாற்றில் சாதி, மத, மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும். பொருளியல் சமூகத்தில் ஒரு சமத்துவம் வர வேண்டும். ஒரு சமத்துவ சமதர்ம சமுதாயத்தை நோக்கி நகர வேண்டும் என்றால்? அப்படி நகர்வதற்கு இந்தியாவில் இருக்கிற ஒரே தத்துவம் சுயமரியாதை. கலைஞரிடம் சென்று உங்களை பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். தயங்காமல் கலைஞர் சொன்னார், நான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன்.

பெரியார் எதை செய்திருந்தாலும், அவரது எல்லா பேச்சு எழுத்துக்களில் எல்லாம் என்ன சொல்லி இருக்கிறார்? என்னுடைய நிலைகளை மாற்றி இருக்கிறேன். என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறேன். ஏன் சில நேரங்களில் பொய் கூட சொல்லி இருப்பேன். ஆனால் ஒன்றை உறுதியாக சொல்கிறேன். எதையும் எனக்காக நான் செய்தது கிடையாது. இந்த சமூகத்திற்காக செய்தது. அந்த அடிநாதம் தான் சுயமரியாதை இயக்கம். நாங்கள் அரசியல்வாதி ரொம்ப எல்லாம் அதிகம் பேச கூடாது. அப்புறம் சமூக வலைதளங்களில் போட்டு அடி அடி என்று அடிப்பார்கள். அப்புறம் முதலமைச்சர் வரை போய்விடும்.

வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு வரலாறு

பெரியாரின் மிகப்பெரிய போராட்டம் 1957 அரசியல் சட்ட எரிப்பு போராட்டம். அந்த போராட்டத்தில் இறந்துபோனவர்களை அரசாங்கம் உறவினர்களுக்கு சொல்லாமல் அங்கேயே புதைத்தார்கள். வெளியே கசிந்து வந்து புதைத்த பிணங்களை 3 நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டுவந்து போராட்ட உணர்வை தூண்டி அடக்கம் செய்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். சாதி மறுப்புக்காக போராடி உயர்நீத்தவர்களில் பெரும்பாலனோர் செட்டியார், முதலியார், நாடார் என எல்லா சாதியினரும் உள்ளனர். எவ்வளவு பெரிய புரட்சியை பெரியார் செய்திருக்கிறார். எந்த சாதிய அடையாளத்தோடு பெருமிதமாக வாழ வேண்டும் என்று கருதுகிறோமோ, அந்த சாதியில் இருந்து பல பேர் வந்து சாதி ஒழிப்பு கொண்டு வந்திருக்கிறார் என்றால் பெரியார் ஆளுமை எவ்வளவு பெரியது.  விஸ்வரூபத்தை நான் நம்புவது இல்லை. ஆனால் கொள்கை ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது பெரியார் மட்டும்தான். சிலசில வாமனன்தான் அதை பார்த்து கூவிக்கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ