நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியுள்ள வக்பு வாரிய திருத்த சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் வக்பு வாரிய சட்டம் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இருக்கிறது. தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சட்டத் திருத்தம் ஆகும். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டில் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 120 மனுக்கள் இருக்கின்றன. தற்போது இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.
வக்பு வாரிய திருத்த மசோதாவில் சில அடிப்படை முரண்கள் இருக்கின்றன. உதாரணமாக வக்பு, இஸ்லாமியர்கள் அல்லாத இருவர் இருக்கலாம் என்று சொல்லியுள்ளனர்.ஆனால் அப்படி இருக்க முடியாது. மத அடிப்படையில் நிலம் நன்கொடையாக வழங்கப்படும்போது, அதை மேலாண்மை செய்யும் அமைப்பில் அந்த மதத்தை சேர்ந்தவர்கள்தான் இருக்க முடியும். மற்றொரு முரண் என்ன என்றால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வக்புக்கு நிலத்தை தானமாக வழங்க முடியாது என்று சொல்கிறார்கள். இது இருவேறு முரண்பட்ட நிலைகளாக தான் பார்க்கப்படும். அடிப்படையில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நிறை விஷயங்கள் இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
வக்பு வாரிய முறையில் உள்ள பிரச்சினைகளை சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது சரிதான். ஆனால் ஒட்டுமொத்த அமைப்பின் அடிப்படையை நாம் மாற்ற முடியாது. சட்டத்தின் அடிப்படையை மாற்றுவது போல எந்த புதிய சட்டத்தையும் கொண்டு வர முடியாது. இருக்கின்ற சட்டத்தை திருத்தமும் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கிறபோது இந்த சட்டத்திருத்தம் என்பது உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எனது உறுதியான பார்வையாகும். இந்தியாவை பொருத்தவரை பிரிட்டிஷ் அமைப்பு முறையை பின்பற்றுகிறோம். இயற்றப்பட்ட சட்டங்களை விட நீதிமன்றத்தால் எழுதப்பட்ட சட்டங்களுக்கு தான் மதிப்பு அதிகம். நீதிமன்றம் வழங்கும் வியாக்யானம் என்பது அதிக வலிமை வாய்ந்ததாகும். அதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும். வக்பு சட்டத்திருத்த சட்டம் மற்றும் அதில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் ஆய்விற்கு உட்பட்டது. அதில் இவர்கள் கேட்கும் நிவாரணம் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக வைக்கப்பட்ட அரசியல் விவாதங்களை முக்கியமாக பார்க்க வேண்டும்.
வக்பு சட்டத்திருத்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்தான் போடுகிறது. உதாரணமாக கேரளாவில் 400 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக வக்பு அமைப்புக்கும், கிறிஸ்தவ அமைப்புக்கும் பிரச்சினை உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் போராடி வருகின்றனர். இது நீதிமன்றம் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே அரசு மூலமாகவோ பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். ஆனால் பாஜக கிறிஸ்தவர்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறது. அந்த கிறிஸ்தவ அமைப்பு வகுப்பு சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பாக அரசியல் செய்கின்றனர்.
வக்பு கல்வி கூடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. நாட்டிலேயே 4வது பெரிய அசையா சொத்துக்கள் வைத்திருக்கும் அமைப்பு வக்பு வாரியம்தான். இதனால் ஏழை முஸ்லீம்களுக்கு பயனே இல்லை என்று சொல்வது அர்த்தமற்ற வாதமாகும். ஒவ்வொருத்தரும் வக்புவை உருவாக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கியிருப்பார்கள். கல்வி, வழிபாட்டுத்தலம், மருத்துவம், குடிநீர் வினியோகம் செய்ய என்று பல்வேறு நோக்கங்களுக்காக வக்புக்கள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அதை சுற்றி இருக்கும் சாதாரண இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, குடிநீர், வழிபாடு போன்ற வசதிகள் பெற்று பயனடைந்து இருப்பார்கள். எனவே ஏழை முஸ்லீம்களுக்கு நன்மை செய்ய போகிறோம் என்று பாஜக சொல்வது இரட்டை வேடமாகும்.
வக்பு திருத்த சட்டத்தின் அடிப்படை நோக்கமே இந்து வாக்கு வங்கியை குறிவைத்துதான். எதிர்க்கட்சிக இஸ்லாமிய வாக்கு வங்கியை குறிவைப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும், பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்பட்டது கிடையாது. நம் நாடு சுதந்திரம் அடைகிறபோது அனைத்து விதமான வழிபாட்டு உரிமைகளுக்கும், அதனை பாதுகாப்பதற்கான உரிமைக்கும் நாம் இடம்கொடுத்திருக்கிறோம். வக்பு வாரிய திருத்த சட்டமானது அந்த உரிமைகளை எல்லாம் மீறுகிறது ஒரு வழக்கறிஞராக எனது பார்வையாகும். உச்சநீதிமன்றமும் அதைதான் சொல்லும் என எதிர்பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.